முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!

சனிக்கிழமை, 14 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 15 - நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்தபிறகு, முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாநில நிதி அமைச்சர்கள், அனைத்துத் துறை செயலாளர்கள், நிதித்துறை நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, பட்ஜெட் தயாரித்து வருகிறார்.

மோடி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எல்லா துறையைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீண்ட எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்கும் அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது. சிதம்பரம் தாக்கல் செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டில் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.

தற்போதுள்ள நடைமுறைப்படி வருட வருமானம் ரூ.2 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி கட்ட வேண்டிய தில்லை. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் அதில் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உடையவர்கள் 20 சதவீதத்தையும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்கள் 30 சதவீதத்தையும் வரியாக கட்ட வேண்டும். இது தவிர வருட வருமானம் ரூ.1 கோடிக்கும் மேல் உள்ள 42,800 பேரிடம் 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. வருமான வரி கட்ட மைப்பை மாற்றி அமைப்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளுடன் ஒரு மாதிரி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைத்து, வசதியானவர்களிடம் அதிக பணத்தை வரியாக பெறும் வகையில் முக்கிய பரிந்துரை செய்யப்படுகிறது.

பரிந்துரைப்படி வருமான வரி விலக்கு உச்சவரம்பை 2 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏற்க மத்திய அரசு முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.. எனவே வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயர்வது உறுதியாகியுள்ளது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால், மாத சம்பளக்காரர்கள் லட்சக்கணக்கானோர், வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுபடுவார்கள். இது ஓரளவுக்கு மத்திய அரசுக்கு வருமான இழப்பாக இருக்கும்.

இந்த வருமான இழப்பை பெரும் பணக்காரர்களுக்கு சிறப்பு வரி போட்டு ஈடுகட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.10 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 35 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. வருமான வரி விலக்கு சலுகை தவிர வீட்டு கடன் மற்றும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுக்கும் வரி விலக்கை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. சுகாதார இன்சூரன்ஸ் பிரிமீயம் ரூ.5 ஆயிரமாக உயரக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருமான வரி விதிப்பில் முதியோர்களையும் மத்திய அரசு மகிழச்சிப்படுத்தும் என்று தெரிய வந்தள்ளது. தற்போது 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை 65 வயதில் இருந்து 60 வயதாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்