முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் செல்கிறது அமெரிக்க போர்க்கப்பல்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன்.17 - ஈராக்கில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு உதவும் பொருட்டு தனது போர்க்கப்பலை பாரசீக வளைகுடா பகுதிக்கு விரைந்து செல்ல அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஈராக்கில் இஸ்லாமிய ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு லெவன்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் சில முக்கிய நகரங்களை ராணுவத்திடம் இருந்து கைப்பற்றியதுடன், பாக்தாதை நோக்கி முன்னேறியபடி உள்ளனர். இந்த நிலையில் ஈராக்குக்கு ராணுவ ரீதியான உதவிகள் தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கருதியதைத் தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் அமெரிக்க போர்க்கப்பலை ஈராக்குக்கு அனுப்புவதற்கான உத்தரவை வழங்கினார். அதைத் தொடர்ந்து யூ.எஸ்.எஸ். புஷ் என்ற பெயருடைய போர்க்கப்பல் வடக்கு அரேபிய கடலில் இருந்து பாரசீக வளைகுடா நோக்கி புறப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கா பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ஈராக்கில் வாழும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு மற்றும் ஈராக் மக்களின் நலன் கருதி அமெரிக்க போர்க்கப்பல் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ராணுவ உதவி தேவைப்பட்டால் அதனை அளிக்கவும் ராணுவ தலைமைத் தளபதி வழிவகை செய்துள்ளார் என்றார். இந்தப் போர்க்கப்பலில் யூ.எஸ்.எஸ். பிலிப்பின் சீ மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் யூ.எஸ்.எஸ். டிரக்ஸ்டுன் ஆகிய ஏவுகனைகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹோஷியார் ஸெப்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈராக்கில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈராக்கிற்கு அனைத்து வகையான உதவிகளைச் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. எந்த வகையிலான உதவிகளை உடனடியாகச் செய்வது என்பது குறித்து அதிபர் ஒபாமா ஆராய்ந்து வருகிறார், என்று அவரிடம் கூறினார்.

எனினும், தீவிரவாதிகள் மீது போர் தொடுக்க அன்னிய நாட்டின் ராணுவத்தை ஈராக்கில் அனுமதிக்க கூடாது என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்ஸீ ஆஃகம் கூறுகையில், தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் வல்லமை ஈராக்கிடம் உள்ளது. அன்னிய நாட்டு நடவடிக்கை மூலம் சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்துவது ஈராக் நலன் களுக்கோ அல்லது அதன் பிராந்தியத்திற்கோ உகந்ததல்ல, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்