முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 23 - உள்நாட்டு போர் வெடித்துள்ள ஈராக் நாட்டில் மேலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்புடன் இந்திய கிளை டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக்கில் போர் பதட்டம் நிலவி வரும் நஜாப் மாகாணத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் அங்கேயே சிக்கியுள்ளனர். அவர்களுடன் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். எங்களது பாஸ்போர்ட்டுகளை நாங்கள் பணிபுரியும் நிறுவனம் தர மறுப்பதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளோம். இங்கு போர் பதட்டம் நீடித்து வருவதால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம். சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புகிறோம். எங்களது பாஸ்போர்ட் விவரங்களை பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று அவர்கள் கூறினர். 

இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளரை எங்கள் அமைப்பு தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆகையால் ஈராக்கில் பாஸ்போர்ட்டுகளை இழந்துள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஈராக் மற்றும் சிரியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை தீவிரவாத அமைப்புகள் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் மொசூல் நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ள 39 இந்தியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்று இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஈராக்கிற்கு புனித யாத்திரை சென்றிருந்த கணவரும், மனைவியும் பத்திரமாக நாடு திரும்பினர். போர் பதட்டம் நிலவி வரும் நஜப் மற்றும் கர்பாலா பகுதியில் உள்ள தர்ஹாவுக்கு மட்டும் செல்ல தங்களை கிளர்ச்சியாளர்கள் அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்