முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் விமானம் மீது துப்பாக்கி சூடு: பெண் பயணி பலி

புதன்கிழமை, 25 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், ஜூன் 26 - சவுதி அரேபியன் ரியாத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் சர்வதேச விமான நிலையத்தில் பி.கே. 756 ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு தரையிறங்கியது. அதில் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர்.

விமானம் 250 முதல் 350 அடி உயரத்தில் தரையிறங்கிய போது அந்த விமானம் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். தங்கள் இருக்கைக்கு கீழே குனிந்து அஞ்சி நடுங்கினர். இச்சம்பவத்தில் விமானத்தில் தனது 9 வயது மகளுடன் பயணம் செய்த பெண் தலையில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.

அருகில் நின்றபடி அவரது மகள் எனது அம்மா இறந்து விட்டார் என்று சொல்லியபடியே அழுது கொண்டிருந்தாள். மேலும் வாஜித், ஜிஜாஷ் என்ற 2 விமான ஊழியர்களும் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். இந்த விமானத்தின் மீது தீவிரவாதிகள் 6 தடவை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். விமானி தாரிக் சவுத்ரியை குறி வைத்து சுட்ட குண்டு பாய்ந்ததில் தான் பெண் பயணி பலியாகி விட்டார்.

ஒரு வேளை அந்த குண்டு விமானி மீது பாய்ந்து இருந்தால் அந்த விமானம் பெரும் விபத்தை சந்தித்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு வஜ்ரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் 177 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 8ம் தேதி கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் உட்பட 34 பேர் பலியாகினர். இச்சம்பவம் நடந்த 2 நாளில் தீவிரவாதிகள் அதே விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். நேற்று முன்தினம் 3வதாக பெஷாவர் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்