முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கியாஸ் விலையை உயர்த்த மத்திய அரசு தயக்கம்

புதன்கிழமை, 25 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 26 - பயணிகள் ரயில் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு நாடெங்கும் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில் சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. ஒவ்வொரு மாதமும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை உயர்த்த ஆய்வு நடந்து வருகிறது. அது போல மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 1 வீதம் மாதம் தோறும் உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்த தகவல்கள் மக்களிடம் அதிருப்தியை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு முன்னதாக வேறு எந்த விலை உயர்வையும் அறிவிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரியவந்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிகிறது. பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.

ஈராக் உள்நாட்டு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலைகளை அதிகளவுக்கு உயர்த்த முடியாது என்பதால் மத்திய அரசுக்கு மானிய சுமை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தாவிட்டால் மத்திய அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூடுதல் மானியம் செலவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்