முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச முன்னாள் பிரதமருடன் சுஷ்மா சந்திப்பு

சனிக்கிழமை, 28 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

டாக்கா, ஜூன்.29 - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டாக்காவில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் வளமைக்காகப் பிரார்த்தித்தேன் என அவர் தெரிவித்தார். டாக்காவிலுள்ள அக்கோயிலுக்கு சுஷ்மா தனிப்பட்ட முறையில் சென்றார்.

இது தொடர்பாக மேலும், சுஷ்மா கூறியதாவது: வங்கதேச பயணத் திட்டமிடலின்போதே, தனிப்பட்ட முறையில் தாகேஸ் வரி கோயிலுக்குச் சென்று, பிரார்த்தனை செய்யத் திட்ட மிட்டேன். இப்போது கோயிலில் பூஜை செய்து விட்டேன். எனது சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவுற்றதாகக் கருதுகிறேன், என்றார்.

வங்கதேச பூஜா உற்சபன் பரிஷத் தலைவர் காஜல் தேவ் நாத் கூறுகையில், சுஷ்மா ஸ்வராஜுக்கு, கோயிலின் மாதிரி வடிவம் மற்றும் கோயிலில் இருந்து அன்பளிப்பாக சேலை ஒன்றும் வழங்கப்பட்டது. அவர் கோயிலுக்கு வரும்போது, இந்து பெண் பக்தர்கள், இந்து சமய தலைவர்கள் அவரை மலர் கொடுத்து வரவேற்றனர், என்றார். சுஷ்மா ஸ்வராஜ் தாகேஸ்வரி கோயிலில் 30 நிமிடங்கள் வழிபாடு செய்தார். அவருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், வங்கதேசத்துக்கான இந்தியத் தூதர் பங்கஜ் சரண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியாவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். கலீதா ஜியாவுக்குச் சொந்த மான விடுதியில் இந்தச் சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வங்கதேசத்தின் அனைத்துத்தரப்பினருடனும் சுமுக உறவு கொள்ள இந்திய அரசாங்கம் முயன்று வருவதின் ஒருபகுதியாகவே இச்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்திலிருந்து சுஷ்மா ஸ்வராஜ் இந்தியா திரும்பினார். அப்போது வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இந்தப் பயணம் பற்றிக் கூற வேண்டுமெனில், மிகுந்த பயனுள்ளதாகவும் திருப்திகரமாகவும் அமைந்தது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்