முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.01 - பெட்ரோல், டீசல் விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத செயல்களினாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும் வெறுப்படைந்திருந்த மக்கள், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்ததோடு, பாரதிய ஜனதா கட்சியை அமோக வெற்றி பெறச் செய்தனர். முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி, மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய கொள்கைகளை புதிய மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மக்கள் எண்ணிக்கொண்டுள்ள சூழ்நிலையில், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 69 காசு என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்றும் உயர்த்தியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளதும் இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தற்காலிகமானது தான். அதன் காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த தற்காலிகக் காரணங்களுக்காக பெட்ரோல் விலையினை உயர்த்தியுள்ளதை மத்திய அரசு மீண்டும் பரிசீலித்து, இந்த விலை உயர்வை திருப்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஜனவரி 2013 முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு மாதாமாதம் 50 காசு அளவிற்கு உயர்த்துவதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதன் அடிப்படையில், தற்போதும் மாதாமாதம் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 50 காசு என்ற அளவில் அதிகரிக்கப்படுகிறது.

இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை காரணமாக கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர். இதுவன்றி, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை; அதனை இங்கு சுத்திகரிக்க ஆகும் செலவு; உள் நாட்டிலேயே உற்பத்தி ஆகும் கச்சா எண்ணெயை எடுக்க ஆகும் செலவு; மற்றும் அதனை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, புதிய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு விரைந்து அறிவிக்க வேண்டும். அப்போது தான், பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த இயலும். விலைவாசி ஏற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

பாரதப் பிரதமர் தலையிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago