முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்–டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 – பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.69–ம், டீசல் விலை 50 காசும் உயர்த்தப்பட்டது. ஈராக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக விலை உயர்ந்து இருப்பதாக கூறப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விலை உயர்வு சாதாரண மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர் விலைவாசி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை ஆகும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க வகை செய்யும் விலை நிர்ணயக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளார் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் கணிசமாக அதிகரிப்பதுடன் இதன் எதிரொலியாக விலைவாசியும் உயரும். இரயில் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், சாதாரண ஏழை எளிய மக்கள் தங்கள் மீது பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும்.

எனவே மத்திய அரசு உடனடியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை மாற்றி அமைத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்