முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க நகை குறைபாடு குறித்த வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 3 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.4 - தங்க நகைகளில் குறைபாடுகள் இருந்தால், அந்த நகைகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள்தான் முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என்று இந்திய தர அமைப்பு இயக்குனர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், கோயம்புத்தூர் தங்கநகைகள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

இந்திய தர அமைப்பின் இயக்குனர் ஜெனரல் புதிய கொள்கையை வகுத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பி.ஐ.எஸ். ஹால்மார்க் தங்க நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்து அதுதொடர்பாக புகார் எழுந்தால், அதற்கு தங்க நகைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களே முழு பொறுப்பை ஏற்கவேண்டும். ஒருவேளை அந்த நகையை வாங்கிய வாடிக்கையாளர், நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், அவருக்கு உதவி செய்யும் விதமாக தங்கநகை தொடர்பான சாட்சி ஆவணங்களை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரைகளை தங்கநகைகள் மீது குத்துவதற்கு, பல இடங்களில் முத்திரை குத்தும் மையங்களை திறப்பதற்கு உரிமத்தை இந்திய தர அமைப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மையங்கள், தர அமைப்பு விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் 78 சதவீத தங்கநகைகளுக்கும், ஒருகிராம் தங்கநாணயங்களுக்கும் 916 ஹால்மார்க் முத்திரைகளை குத்தி விடுகின்றனர். இதுபோன்ற மையங்கள், ஹால்மார்க் முத்திரைகளை குத்துவதற்கு முன்பு தங்கநகைகளை எல்லாம் தோராயமாகத்தான் மதிப்பிடுகின்றனர்.

இந்த ஹால்மார்க் முத்திரை குத்தப்பட்ட தங்கநகைகள் எல்லாம் ஒரே விதமாக, சுத்தமான தங்க ஆபரணம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்ற தங்கநகைகளை துல்லியமாக மதிப்பீட எந்திரங்கள் எதுவும் இல்லை. எனவே, விற்பனை செய்யப்படும் தங்கநகைகள் எல்லாம் நூறு சதவீத ஹால்மார்க் தங்கம் என்று கூறமுடியாது. நகைக்கடைகளில் உள்ள தங்க ஆபரணங்களும் நூறு சதவீதம் தரமான தங்கம் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.

ஒரு முத்திரைக்கு ரூ.8 என்றும், ரூ.10 என்றும் வசூலித்துவிட்டு, ஹால்மார்க் முத்திரை மையங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் நகைகளுக்கு முத்திரைகளை குத்தி வருகின்றனர். எனவே, தங்கநகைகளில் குறைபாடுகள் இருந்தால், அது தொடர்பாக எழும்பும் புகாருக்கு விற்பனையாளரே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது. இந்திய தர இயக்குனர் ஜெனரலின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தங்கநகைகள் மீதான குறைபாடுகளுக்கு, அதை விற்பனை செய்த விற்பனையாளர்கள்தான் பொறுப்பு என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்