முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்ததில் 11 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை 7 - சென்னை - திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உப்பரப்பாளையம் என்ற இடத்தில், எலக்ட்ரானிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றின் சுற்றுச்சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனால், கிடங்குச் சுற்றுச்சுவர் அருகே குடிசைகளில் தங்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பலரும் சுற்றுச்சுவர் இடிபாடுகளில் சிக்கினர்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும், 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதேவேளையில், நாகராஜ் என்ற 19 வயது இளைஞர் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவருமே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

நேற்றிரவு தொடங்கி கன மழை பெய்ததன் தொடர்ச்சியாக, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரர் ராகவ ராவ், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்று கூறினார்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும்,நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் பலர் ஊருக்குச் சென்றுவிட்டதால் அதிர்ஷ்டவசமாக பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாகவும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம், உப்பரபாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சோழவரம் போலீசார், கட்டட உரிமையாளர்களான பாலா மற்றும் ராமநாதன் ஆகியோர்களை கைது செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!