முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை: தலைவர்கள்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரெயில்வே பட்ஜெட் குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மத்திய ரெயில்வே மந்திரி தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட்டில், நவீன மயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்குதல், இணையம் மூலம் நடைமேடைச் சீட்டு வழங்குதல், அலைபேசி வழியாக ரெயில் வருகை புறப்பாடு தகவல் அளித்தல், முக்கிய நிலையங்களில் ஒய்-ஃபை இணைய வசதி, முக்கிய ரெயில்கள், புறநகர் ரெயில்களில் தானியங்கிக் கதவுகள், முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கும் இணையம் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் அலைபேசி மூலம் முன்பதிவு வசதி போன்ற அறிவிப்புகள், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்து இருக்கின்றது.

கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய தடங்கள் அமைக்கவும், உள்நாட்டு முதலீடுகள் மற்றும் அந்நீய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பு ரெயில்வே துறை தனித்தன்மையை இழந்து தனியார்மயம் ஆக்கப்பட்டுவிடும் என்ற கவலையைத் தருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஒருசில புதிய வண்டிகளைத் தவிர, நீண்ட கால எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை-கன்னியாகுமரி இரட்டைத்தடம் அமைக்கும் திட்டம், நிலுவையில் உள்ள பல்வேறு அகலப்பாதைத் திட்டங்கள், மின்மயமாக்கும் திட்டங்கள் மற்றும் புதிய தடங்கள் அமைத்திட அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

சென்னை இராயபுரத்தில் நான்காவது முனையம் அமைப்பது, சென்னை மையத் தொடர்வண்டி (சென்ட்ரல்) நிலையத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஏற்பக் கட்டணங்களை உயர்த்துவது என முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்திய கட்டண நிர்ணய ஆணையம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவ்வப்போது கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் சுமையை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.பட்ஜெட்டில் பொதுவாக வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:

முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை டிஜிட்டல் முறையில் வைப்பது உட்பட ரயில்வே பட்ஜெட்டில் ஆடம்பரமான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக சதானந்த கவுடாவின் அறிவிப்புகள் இருக்கின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, செயல்படுத்திய பல திட்டங்கள், இன்று புதிய அறிவிப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1 ரூபாய் வருமானத்தில் 93 பைசா செலவாகிறது என்று சொல்லியிருக்கிற சதானந்த கவுடா, வருமானத்தை உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை என்று சொல்லாமல், நேரடி அந்நிய முதலீட்டை கேட்போம் என்று அறிவிக்கிறார். ரயில்வே துறையை தனியார்மயமாக்குதலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே துறையை திறந்து விடுவதற்கும் இன்றைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் ரயில் பட்ஜெட் ஆகும்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தியும், அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அவர் குறைகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2014 -15 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், அதிக தொடர்வண்டிகளும் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கிறார் தொடர்வண்டி அமைச்சர் சதானந்த கவுடா.

தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 58 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 5 மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இவற்றிலும் சென்னை-ஷாலிமார் பிரீமியர் விரைவு வண்டி, சென்னை-அகமதாபாத் வாரமிருமுறை விரைவு வண்டி, சென்னை-விசாகப்பட்டினம் வார விரைவு வண்டி ஆகியவை சென்னையை தாண்டி தமிழகத்திற்குள் வராதவை. இவற்றால் தமிழகத்திலுள்ள சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

மீதமுள்ள இரு தொடர்வண்டிகளில் ஒன்றான பெங்களூர் - ஓசூர் புறநகர் தொடர்வண்டி பெங்களூரிலுள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துவர வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறை திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தொடர்வண்டிகளையும், திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவாவது தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கைகளை அமைச்சர் சதானந்த கவுடா நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்