முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஉலைகள் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 11 - நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது,

ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் புகுஷிமா அணு உலை விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்திய அணுசக்தி கார்ப்பரேசன் மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆகியவற்றை சேர்ந்த நிபுணர் குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதையும் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் அம்சங்களை தங்கள் வடிவமைப்பில் பெற்றுள்ளன என்பதையும் இந்த சோதனைகள் உறுதிப்படுத்தின. கடற்கரையோரம் அமைந்துள்ள தாராபூர், கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய அணு உலைகளின் பாதுகாப்புக்காக உரிய சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை சீற்றங்களின் பாதிப்பை சமாளிப்பதற்காக இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப்படுகின்றன. கடற்கரையோரம் அமைந்துள்ள அணு உலைகளின் வடிவமைப்பில் பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம் போன்றவை தொடர்பான தொழில்நுட்ப விவகாரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஜிதேந்திரசிங் தனது பதிலில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்