முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அளிப்பது கட்டாயம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.23 - மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 50 லட்சம் பேர் தங்களது சொத்து விவரங்களை அரசிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லோக்பால் சட்ட விதிகளின்படி மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதன்படி கையிருப்புப் பணம், வங்கி முதலீடுகள், முதலீட்டுப் பத்திரங்கள், பங்குச் சந்தை முதலீடு, மியூச்சூவல் பண்ட், காப்பீடு பாலிசி, பி.எப். கணக்கு விவரம், கடன்கள், மோட்டார் வாகனங்கள், தங்க நகை கள் குறித்த அனைத்து விவரங்களையும் மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரின் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களையும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூலை 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சொத்து விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியரின் குறிப்பிட்ட சொத்து அவரின் 4 மாத அடிப்படை சம்பளத்துக்கு உள்பட்டதாக அல்லது ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டதாக இருந்தால் அவர் சம்பந்தப்பட்ட சொத்து விவரங்களை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசீலிக்கலாம். ஏற்கெனவே சொத்து விவரங் களை தாக்கல் செய்துள்ளவர்கள் நடப்பாண்டில் செப்டம்பர் 15-க்குள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அரசு ஊழியரின் வாழ்க்கைத் துறை, குழந்தைகளின் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

லோக்பால் சட்ட மசோதாவுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு லோக்பால் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளத.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்