முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் ஜாமீன் கோரிய மனுக்கள் மீது ஆக.6ல் உத்தரவு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 24 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய அமலாக்க துறையின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 10 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி ஒத்தி வைத்தார்.

2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு பிரதிபலனாக சில தனியார் நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடி அளித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் கோடிக்கணக்கில் நிதி பரிவர்த்தனை முறைகேடு நடந்துள்ளதாக கூறி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்க துறை தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில் சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வா ஆகியோருடன் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவி நிர்வாகி அமிர்தம், சினியுக் பட நிறுவன கரீம் மொரானி உட்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் ஜாமீனில் விடுதலை செய்ய கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அமலாக்க துறை பண மோசடி தடுப்பு சட்டம் 2002ன் படி குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் முறைகேடாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று வாதிட்டது.

அதே சமயம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அமலாக்க துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முரண்பாடானவை. கலைஞர் டி.வியுடனான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வணிக நோக்கத்துடன் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டவை என்று முறையிட்டு ஜாமீன் கோரினர். ஜாமீன் மனுக்கள் மீது நீதிபதி ஷைனி இறுதி விசாரணை நடத்தினார். அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான வாதங்கள் முடிவடைந்துள்ளன. தற்போது சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியங்கள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுக்கள் மீதும் உடல்நிலை காரணமாக வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் தயாளு அம்மாளின் மனு மீதுமான உத்தரவை வரும் ஆகஸ்ட் 6ம் தேதி பிறப்பிக்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்