நொறுங்கிய அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

அவ்கதோகவ், ஜூலை.27 - 116 பேருடன் விழுந்து நொறுங்கிய அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் மாலி நாட்டு எல்லையில் கண்டெடுக்கப்பட்டன. ஏர் அல்ஜீரியா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸுக்கு புறப்பட்டது. கிளம்பிய சுமார் 50 நிமிடத்திலேயே விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது; ரேடாரின் பார்வையில் இருந்தும் மறைந்துவிட்டது.

மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மாலி பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் மாயமானது. அடுத்த சில மணி நேரத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். விமானத்தில் இருந்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை மாலி நாட்டின் கோஸி பகுதியில் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பர்கினா பாசோ நாட்டின் ராணுவ ஜெனரல் கில்பெர்ட் தெரிவித்தார். புயல் வீசியதன் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வேண்டும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமானத்தில் இருந்த 116 பேரில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 24 பேர் பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர லெபனான், அல்ஜீரியா, ஸ்பெயின், கனடா, ஜெர்மனி, லக்ஸம்பர்க் நாடுகளைச் சேர்ந்தவர்களும் விமானத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: