முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம்

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 10 - பிஎஸ்என்எல் செலவினத்தை குறைக்கும் வகையில் அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலை தொடர்பு சேவைக்குரிய நிலுவை கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் வருமாறு:

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ. 1,206.65 கோடி அளவுக்கு நிலுவை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில் ரூ. 1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன. நிலுவை கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலை தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது. பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ. 1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும் அதன் ஊழியர் செலவினத்தை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்பு திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்த திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்