முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு விசாரணையில் தொய்வா? சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.14 - தகவல் தொடர்பு துறையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் பல்வேறு காரணங்களால் விசாரணை முடிவடையாமல் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பில் 2ஜி வழக்கு விசாரணையின் மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றி வந்த டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி திடீர் என்று அதில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ஸ்பெக்டரம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எச்.எல்.தத்து பினாகி சந்திரகோஷ், எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்டரம் வழக்கின் சிபிஐ விசாரணை மேற்பார்வை அதிகாரியாக செயல்பட்ட டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி மாற்றப்பட்டு இருப்பது பற்றி மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் புகார் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு அனுமதி இல்லாமல் அவரை சிபிஐ வேறு பிரிவுக்கு மாற்றி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிகாரி மாற்றத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். அவ்வாறு அந்த அதிகாரி மாற்றப்பட்டு இருப்பதால் அதை சிபிஐ திருத்திக் கொண்டு பழையபடி அவரை 2ஜி வழக்கு விசாரணை அதிகாரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஸ்பெக்டரம் வழ்ககில் இதுவரை நடைபெற்ற விசாரணை விவரங்கள் மற்றும் ஆவணங்கள் முழுவதையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிரான வகுற்றப்பத்திரிக்கை தொடர்பான விசாரணக்கு தேவைப்படுவதால் வழக்கு ஆவணங்கள் முழுவதையும் தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீதான குற்றப்பத்திரிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக சிபிஐ மீது குற்றம் சாட்டி, கொண்டு நிறுவனம் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் மேற்கண்ட அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து 2ஜி வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே விசாரணை அதிகாரி மாற்றம் பற்றி சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்காவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: சில நிர்வாக காரணங்களுக்காக டிஐஜி சந்தேஷ் மாற்றப்பட்டார். ஆனால், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அதிகாரியாக நீடிப்பார். அவரை மாற்றுவதற்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்