முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழிப்பறி எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர் நாடகம்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.15 - நிலம் வாங்க வாடகைக் காரில் வந்த போது மயக்க ஸ்பிரே அடித்து 7 கோடியே 35 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் நாட்றம்பள்ளி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கடன் பிரச்சினைக்காக தான் நாடகமாடியதாக பின்னர் அவர் ஒப்புக்கொண்டார்.

வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் மேம்பாலம் அருகே புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பெரியவர் ஒருவர் கை,கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வாணியம்பாடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர் வாணியம்பாடி தாலுகா கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது:

’’கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடியில் இருந்து சென்று பெங்களூர் டேனரி பகுதியில் குடியேறினேன். அதன்பின்னர் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று, சேஷ்யோகி என்பவரிடம் பணியாற்றினேன். இந்நிலையில், பல கோடி மதிப்புள்ள நிலத்தை சேஷ்யோகிக்கு வாங்கிக் கொடுத்ததில் எனக்கு கமிஷன் தொகையாக 7 கோடியே 35 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே காலி நிலம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருவதாக என் நண்பர் கூறினார். அதனால் அந்த நிலத்தை வாங்க வாடகைக் காரில் பெங்களூரில் இருந்து வாணியம்பாடிக்கு புறப்பட்டேன்.

காரை பெங்களூரைச் சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டினார். அப்போது அவரது நண்பர் ஷபீக் அகமத் உடன் வந்தார். கார் வாணியம்பாடி எல்லைக்குள் வந்ததும், எங்களை முந்திச்சென்ற வெள்ளை கார் நான் வந்த காரை மடக்கியது. அதிலிருந்து 4 பேர் கீழே இறங்கி, என் முகத்தில் மயக்க ஸ்பிரேயை அடித்தனர். கண்விழித்துப் பார்த்தபோது, மேம்பாலம் அருகே முட்புதரில் கிடந்தேன். என் கை,கால்கள் கட்டப்பட்டு இருந்தது, என்றார்.

உடனே, உஷாரான போலீஸார் மயக்கம் தெளிந்த முகமது அமீனை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்றனர். இதற்கிடையே, தொழில் அதிபரை பெங்களூரில் இருந்து வாடகைக் காரில் அழைத்து வந்த ஓட்டுநர் ரபீக், அவரது நண்பர் ஷபீக் அகமத் ஆகியோரைத் தேடி தனிப்படை போலீஸார் பெங்களூர் விரைந்தனர். இதற்கிடையே. மாலையில் மீண்டும் முகமது அமீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அமீன் முன்னுக்குப் பின்னாக பதில் கூற ஆரம்பித்தார். சந்தேகம் அடைந்த போலீஸார், அவரிடம் துருவித்துருவி விசாரித்த போது, தான் நாடகமாடியதாக உண்மையை ஒப்புக் கொண்டார்.

‘‘தொழில் ரீதியாக பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அதில் ஒரு தொகையை புதன்கிழமை பட்டுவாடா செய்வதாக உறுதி அளித்திருந்ததாகவும் கூறிய அவர், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவே பணம் கொள்ளை போனதாக நாடகம் ஆடியதாக’’ போலீஸாரிடம் தெரிவித்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் அமீனின் குடும்பத்தினர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்துக்கு வந்தனர். நடந்த சம்பவத்துக்கு போலீஸா ரிடம் மன்னிப்புக் கேட்டனர். இதனை யடுத்து, முகமது அமீனை எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்