ஈராக் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்த அணை மீட்பு

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத். ஆக. 19 - இராக்கில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த நாட்டின் மிகப் பெரிய அணை, இராக் அரசுப் படையினரால் மீட்கப்பட்டது. குர்திஷ் படையினரின் உதவியுடன் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த சண்டையில் இந்த முன்னேற்றதை அரசுப் படை அடைந்துள்ளது.

இராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப்படையினர் தனி நாடு அமைக்கும் கோரிக்கையோடு, சிரிய எல்லையிலும் இராக்கில் 15- க்கும் மேற்பட்ட நகரங்களையும், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

இதே போல, தலைநகர் பாக்தாத் அருகே உள்ள நாட்டின் மிகப் பெரிய அணையை இராக் கிளர்ச்சிப்படையினர் கைப்பற்றினர். இதனால் அங்கு நிலவும் பதற்றமான சூழலிலிருந்து மீண்டு வர, இராக் அரசுப்படடை அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் குர்திஷ் படைகளுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புடன் சண்டையிட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த மொசூல் அணையை சுற்றி, அமெரிக்க உதவியுடன் குர்தீஷ் படைகள் வான் வழி தாக்குதல் நடத்தியது. அமெரிக்க போர் விமானங்களும் குண்டு மழை பொழிந்தது.

இதில் கிளர்ச்சி அமைப்புக்கு சொந்தமான 19 ஆயுத டேங்கர் லாரிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. தொடர் தாக்குதலை அடுத்து, அணைப் பகுதியில் முகாமிட்டிருந்து கிளர்ச்சி அமைப்பினர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

மொசூல் அணையை, கிளர்ச்சியாளர்கள் கடந்த 7- ஆம் தேதி கைப்பற்றினர். மொசூலில் உள்ள அணையிலிருந்து பல நகரங்களுக்கு பாசனத்திற்காகவும் குடினீர் தேவைக்காகவும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் இந்த அணையை தகர்த்தால், மொசூல், தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற நெருக்கடியான சூழலில், இந்த அணை மிகப் பெரிய அளவிலான தாக்குதலுக்கு பின்னர், கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இராக்கில் சன்னிப் பிரிவு கிளர்ச்சி அமைப்பினரின் தாக்குதலுக்கு பயந்து சுமார் ஒரு கோடியே 25 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். கடந்த வாரம் முதல் அங்கு, அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுப்பட்டுவருவதால், அங்கு அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ. நா. மனிதாபிமான ரீதியிலான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: