சஹாரா ஓட்டல்களை வாங்க புரூனே சுல்தான் விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.20 - நியூயார்க் மற்றும் லண்டனில் சஹாரா நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டல்களை வாங்க புரூனே சுல்தான் விருப்பம் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தராத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஹாரா குழும அதிபர் சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜாமீனில் வெளியில் விட, ரூ.10,000 கோடி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சிறையில் இருந்தபடியே பணம் திரட்டும் முயற்சியில் சுப்ரதா ராய் இறங்கியுள்ளார். நியூயார்க்கில் உள்ள அவரது பிளாசா ஓட்டல், லண்டனில் உள்ள கிராஸ்வெனார் மற்றும் ட்ரீம் ஓட்டல்களை விற்க வசதியாக திகார் சிறை நிர்வாகம், சிறை வளாகத்திலேயே 600 சதுர அடி அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளது.

இதில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேரம் பேச வசதி உள்ளது. ஓட்டல்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் திகார் சிறையில் சுப்ரதா ராயை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த முயற்சியில் புரூனே சுல்தான் ஹசனல் போல்கியா, ரூ.12,173 கோடிக்கு இந்த இரு ஓட்டல்களையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வேறு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், புரூனே சுல்தான் குறிப்பிட்டுள்ள விலை முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டல்கள் மீது சஹாரா நிறுவனம் சீன வங்கியில் வாங்கியுள்ள கடனையும் ஏற்றுக் கொள்ள சுல்தான் தயாராக உள்ளார்.

புரூனே சுல்தானுக்கு விற்பனை செய்வது இறுதி செய்யப்பட்டால், இந்த ஒப்பந்தம் அடுத்தமாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, புரூனேயில் தன்பாலின உறவாளர்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்கி, கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டதால், புரூனே சுல்தான் சஹாரா ஓட்டலை வாங்க அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: