கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த திட்டம்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

  

பாக்தாத், செப்.4 - ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் மொசூல் நகரைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கும் துண்டு பிரசுரங்கள் அமெரிக்க போர் விமானங்கள் மூலம் வீசப்பட்டன.

ஈராக்கில் சன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், ஷியா இஸ்லாமிய அரசுக்கு எதிராக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 10- ஆம் தேதி இராக் அரசை அச்சுறுத்தும் வகையில் தலைநகர் பாக்தாதை சுற்றிய முக்கிய நகரங்கள், மொசூல் அணை ஆகியவற்றை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இதனை அடுத்து இஸ்லாமிய நாடு அமைக்க முயற்சிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஈராக் ராணுவத்திற்கும் குர்திஷ் படையினருக்கும் ஆதரவு அளித்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தி வருகின்றன. இதன் பலனாக மொசூல், எர்பில், சுலைமான் பெக், யங்கஜா ஆகிய நகரங்கள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு, அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தப்பட்டது.

இதனால், அந்த பகுதியில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறும்படி இராக் பாதுகாப்புத்துறை அமைச்சர் கையெழுத்திட்ட துண்டுப் பிரசுரங்கள், அமெரிக்கப் போர் விமானங்களால் நகரம் எங்கும் நேற்று இரவு வீசப்பட்டது.

இந்த நிலையில், மொசூல் நகரை சுற்றிய பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருக்கும் இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: