ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க உடன்படிக்கை

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வேல்ஸ்,செப்.7 - ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் நடைபெற்றது.

அப்போது, ஐ.எஸ். கிளர்ச்சி இயக்கத்துக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பங்களிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதையொட்டிய முடிவு எட்டப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "இராக் நகரங்களில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான அமைப்பு, வரும் காலத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையலாம்.

இதனால் நாம் அனைவரும் அந்த இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சர்வதேச நாடுகள் இணைந்து அந்த இயக்கதை முற்றிலும் அழிக்க வேண்டும்.

இஸ்லாமிய சுமுதாயத்தினர் வாழும் அரபு நாடுகளும், அந்தச் சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் சன்னி பிரிவினரும் குறிக்கோள் இல்லாத இந்த இயக்கத்துக்கு எதிராகத்தான் இருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானது என்று இவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அவர்களும் இந்த இயக்கத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நமக்கு உதவத் தயாராக உள்ளனர்.

ஐ.எஸ். இயக்கத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்ய, அவர்களின் ஆயுதக் குழுவினரின் நிதி ஆதராங்களையும், இயக்கத்தின் ஆயுத பலம், மனித வளத்தை ஒடுக்கிய பின்னர், அவர்களை நாம் நமது ராணுவத்தின் உதவியால் ஒடுக்க வேண்டும்.

முதலில் அவர்களின் ஆயுத செல்வாக்கை வீழ்த்துவதன் மூலம் அந்த இயக்கத்தின் மனிதவளத்தை நம்மால் குறிவைத்து அழிக்க முடியும்" என்றார் ஒபாமா.

இந்தக் கூட்டத்தின் அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் கலந்துகொண்டு, இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஐ.எஸ். ஆயுதக் குழுவுக்கு எதிராக ஆதரவு திரட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அடுத்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: