ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலி நிறுவன அதிகாரிகள் விடுதலை

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

மிலன், அக் 11:

ரூ. 1600 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இத்தாலியின் பின்மெக்கானிக்கா, அதன் துணை நிறுவனங்களான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்களின் முன்னாள் உயரதிகாரிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து இத்தாலியின் அன்ஸா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவிஐபிக்களின் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கியூஸெப்பி ஓரிஸி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புரூனோ ஸ்பாக்னோலினி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் தவறான விலைப்பட்டியலை தாக்கல் செய்ததற்காக அவர்கள் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்று அன்ஸா தெரிவித்துள்ளது. ரூ. 3,600 கோடி மதிப்பிலான 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய தரப்புக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இத்தாலி போலீசார் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிகாரிகள் சிலரையும் இந்த பேரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இத்தாலியின் மிலன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: