முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஸ்ரீமீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, அக் 27 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெற்று வருகிறது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 மாதங்களில் 4 மாதம் அம்மனுக்குரிய திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழி வெண்ணெய்காப்பு ஆகிய உற்சவங்கள் அம்மனுக்கு நடைபெறும். உற்சவங்களின் போது அம்மன் தனியாக ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 23ம் தேதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி கோலாட்ட உற்சவம் தொடங்கியது. 3ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் ஆடி வீதியில் அம்மன் எழுந்தருளி வந்து அருள்பாலித்தார்.

அம்மன் சன்னதியில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் கைபாரத்தில் எழுந்தருளி, கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதியை வலம் வருகிறார். அம்மனுக்கு முன்பு சிறுமியர், பெண்கள் கோலாட்டம் ஆடி வருவர். அம்மனின் சிறப்பை விளக்கி கோலாட்ட பெண்கள் பாடல் பாடி வருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பதாகும்.

நாட்டில் நல்ல மழை பெய்து வளம் கொழிக்க அம்மனை வேண்டும் வகையில் வைகையில் மண் எடுத்து அதில் பசு உருவம் செய்வர். பின்னர் அதை பொற்றாமரை குளத்தில் உள்ள நீரில் பூஜைக்கு பின் கரைப்பர். இதையடுத்தே அம்மனுக்கு கோலாட்ட உற்சவம் நடைபெறும். அதன்படி வரும் 29ம் தேதி வரையில் கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் உத்தரவின் பேரில் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜன் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்