முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்?

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக் 27 - திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி நகர்ப்புற காவல்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் செட்டி கூறியதாவது,

திருமலை, திருப்பதிக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறை அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் தலைநகரான ஐதராபாத்தில் சிமி தீவிரவாத அமைப்பின் உளவாளிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களை மத்திய உளவுத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அதன் மூலம் சிமி தீவிரவாதிகளின் நடமாட்டம் திருப்பதியிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தின் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் பாதுகாப்பு படையினரின் துணையுடன் திருப்பதியிலும் திருமலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புத்தூ ர் பகுதியில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் ஊடுருவியதாக மக்களிடம் பீதி ஏற்பட்டது. தற்போது தீவிரவாதிகள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து மத்தி உளவு துறை சிறப்பு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. திருப்பதியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில நிறுவனங்களில் சிமி தீவிரவாதிகள் முதலீடு செய்துள்ளதாகவும் திருப்பதியில் சில நிலங்களை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் குழு திருப்பதியில் விரைவில் விசாரணையை தொடங்கவுள்ளது. சிமி உளவாளிகளின் நடமாட்டம் இருப்பதால் திருப்பதி நகர்ப்புற காவல்துறை, பாதுகாப்பு பணிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றது. மேலும் சிமி உளவாளிகள் குறித்து விசாரிக்க திருப்பதி காவல்துறை பல ரகசிய குழுக்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் திருப்பதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார் கோபிநாத் செட்டி. திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்