முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம்: சீனா எதிர்ப்பு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக் 30 - தென் சீன கடலில் துரப்பண பணி மேற்கொள்வது குறித்து இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங்லேய் கூறுகையில்,

இந்தியாவும், வியட்நாமும் இணைந்து தென் சீன கடலில் உள்ள எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணிகள் மேற்கொள்ளும் விவகாரத்தை பொருத்தவரை எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். நான்ஷா தீவுகள், சீனாவுக்கு சொந்தமானவை. அந்த தீவில் சீனாவுக்கு உள்ள இறையான்மையை குலைக்கும் வகையில் தென் சீன கடலில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட கூடாது. தற்போது தென் சீன கடல் பகுதியில் அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதியை தொடர்ந்து பேணி காக்கும் வகையில் அனைத்து நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தீவுகளுக்கும் சீனா உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக வியட்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புரூணை, தைவான் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையில் பதட்டத்தை ஏற்படுத்தும் விவகாரமாக எண்ணெய் துரப்பண விவகாரம் உருவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் தென் சீன கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகள் மேற்கொள்ள சீனா முயற்சி செய்த போது அதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்தது. துரப்பண பணியை மேற்கொள்ள வந்த சீன கப்பல்கள் மீது வியட்நாம் கப்பல்கள் மோதின. பதிலுக்கு சீன கப்பல்களும் வியட்நாம் கப்பல்கள் மீது மோதின. இந்த மோதல் சம்பவங்கள் பல நாட்களுக்கு நீடித்தன. அதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிராக வியட்நாமில் நடைபெற்ற கலவரத்தில் சீனர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்த சூழலில் எண்ணெய் துரப்பணம் தொடர்பான இந்திய, வியட்நாம் ஒப்பந்தத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்