முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி - தயாளு - ராசா மீது குற்றச்சாட்டு பதிவு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ 1 - திமுக தலைவர் கருணாநிதி பெயரில் கடந்த 2007ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கலைஞர் டி.வி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதம், மகள் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீதம், இயக்குனராக இருந்த சரத்குமாருக்கு 20 சதவீதம் பங்குகள் இருந்தன.

இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்த போது கலைஞர் டிவிக்கும் அந்த பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் என்ற தொலை தொடர்பு நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது என்று சிபிஐ கூறியது. 9 நிறுவனங்கள் மூலம் இந்த பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை கலைஞர் டி.வி. மறுத்தது. தொலைக்காட்சி மேம்பாட்டுக்காக ரூ. 200 கோடி கடன் பெறப்பட்டதாகவும், அந்த கடன் தொகை வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக கலைஞர் டி.வி. விளக்கம் அளித்தது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தது. ஆனால் சிபிஐ விசாரணையில் பணப்பரிமாற்றம் சட்ட விரோதமாக நடந்து இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அமலாக்க பிரிவு இது தொடர்பான விசாரணையை நடத்தியது. இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவினரும் உறுதிப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அமலாக்க பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். தயாளு அம்மாள் எழுத்துப்பூர்வமாக தன் பதிலை கொடுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுத்த பதில் மற்றும் விசாரணை தகவல்களை தொகுத்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி டெல்லி சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி, தயாளு அம்மாள், அமிர்தம், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சரத்குமார் உட்பட 10 பேர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

இது தவிர ஸ்வான் டெலிகாம் நிறுவனம், குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட 9 நிறுவனங்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தொடங்கியது. மத்திய அமலாக்க பிரிவு தரப்பில் வக்கீல் ராஜசேகர் ஆஜராகி வாதாடினார். அவர் 2 ஜி ஒதுக்கீடு உரிமம் பெறுவதற்காக சட்டவிரோதமான முறையில் பணம் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார்.

கலைஞர் டி.வி. ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 19 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதை தொடர்ந்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மே மாதம் முதல் வாக்குமூலம் பெற்றனர். மேலும் விசாரணைகளும் நடந்தன. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்தன. இதையடுத்து குற்றப்பத்திரிகை மீதான உத்தரவு அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் அறிவித்திருந்தது. அதன்படி இந்த விவகாரத்தில் சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி உத்தரவை வெளியிட்டார். அமலாக்கபிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 தனி நபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் மீது உரிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் படி அவர் உத்தரவிட்டார். அதன்படி 19 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120(பி)(கிரிமினல் சதி) மற்றும் பணப்பரிமாற்ற முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு பதிவு காரணமாக ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் 2 ஜி வழக்குடன் இந்த வழக்கையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரர் என்ற வகையில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் அவர் டெல்லி சென்று சிபிஐ கோர்ட்டில் ஆஜராக வேண்டியது வரும். அமலாக்கப்பிரிவு மேற்கொண்டுள்ள இந்த பண பரிமாற்ற வழக்கு விசாரணை வரும் (நவம்பர்) 11ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 தனி நபர்கள் மற்றும் 5 நிறுவனங்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடுவார்கள். அவர்களது மறுப்புகளுக்கு அமலாக்க பிரிவு வக்கீல் விளக்கம் அளிப்பார். வக்கீல்கள் வாதம் முழுமை பெற்ற பிறகு நீதிபதி ஷைனி தீர்ப்பை வெளியிடுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்