முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கு ஆதரவு தாருங்கள்: ரஜினிகாந்துக்கு வாசன் அழைப்பு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ. 9–

காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சித் தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், அந்த கட்சிக்கு, என்ன பெயர் சூட்டுவது என்று தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த வாரம் அந்த புதிய கட்சியின் பெயர் என்ன என்று தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் புதிய கட்சிக்கான கொடி எப்படி இருக்கும் என்பதும் தெரியவரும்.

புதிய கட்சிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டதும் திருச்சியில் கட்சி தொடக்க விழா கூட்டத்தை நடத்தும் தேதி தெரியவரும். புதிய கட்சியின் தொடக்க விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த வாசன் திட்டமிட்டுள்ளார். குறைந்தபட்சம் 2 லட்சம் பேர்களையாவது திரட்ட வேண்டும் என்பது அவர்களது இலக்காகும்.

இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட வாசன் ஆதரவாளர்கள் வியூகம் வகுத்துள்ளனர். அதன்படி வாசன் இன்று ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

இதற்கிடையே தனது கட்சியை மக்களிடம் பதிய வைக்கவும், மக்களைக் கவரவும் பிரபலமானவர்களின் உதவியை நாட ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். பிரபலமானவர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் தன் கட்சிப்பலம் உயரும் என்று நினைக்கிறார்.

இதை கருத்தில் கொண்டு அவர் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வாசன் கூறியதாவது:–

சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் புகழ்பெற்றவர். எல்லாராலும் விரும்பப்படுபவர். அவர் எங்கள் புதிய கட்சிக்கு ஆதரவு தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ரஜினி போன்ற பிரபலமான, மரியாதைக்குரிய சமுதாயப் பெரியவர்களை எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் கட்சி, பிரபலமானவர்களுடன் இணைந்து செயல்படும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

ரஜினிக்கு வாசன் அழைப்பு விடுத்து இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது’’ என்று சமீபத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டு கோள் விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கவே ரஜினியை வாசன் அழைத்ததாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்து இப்போதே தமிழக கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. ரஜினி ஆதரவு பெற்றால் கணிசமான ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து ரஜினிக்கு வலை வீசியபடி உள்ளனர்.ரஜினி ஆதரவை பெற மற்ற கட்சிகளும் முயன்று வருகின்றன. சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து கடிதம் எழுதியதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஜினியிடம் தி.மு.க.வினரும் நல்ல நட்புடன் உள்ளனர்.இதற்கிடையில்தான் வாசன், ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஜினி ஆதரவைப் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினி வழக்கம் போல் தன் பணிகளை தொடர்ந்தபடி உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்