முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015 உலக கோப்பை கிரிக்கெட் பரிசு தொகை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், நவ.12 - அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.25 கோடி பரிசு தொகை கிடைக்க உள்ளது. கடந்த உலக கோப்பையைவிட இது 20 சதவீதம் அதிக தொகையாகும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டித்தொடர் குறித்து ஆலோசிக்க ஐசிசி வாரியம் கடந்த மூன்று நாட்களாக துபாயில் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது.

போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் அதிகாரிகள் திருப்தி தெரிவித்தனர். இதன்பிறகு போட்டித்தொடருக்கான பரிசுத் தொகைக்கு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதன்படி கடந்த உலக கோப்பையைவிட மொத்த பரிசு தொகையின் மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை கடந்த கோப்பையை ஒப்பிட்டால் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 37 லட்சத்து 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பில் இது ரூ. 23 கோடியே 11 லட்சத்து 31250 ஆகும்.

அதே நேரம் போட்டியின் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று கோப்பையையும் வென்றால் அந்த அணிக்கு $4,020,000 பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.24,65,40,000 கோடிகளாகும்.

லீக் சுற்றில் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியுற்ற அணி கோப்பையை வென்றால் அந்த அணிக்கான பரிசு தொகை $3,975,000. இந்திய ரூபாய் மதிப்பில் 24,49,99,125 ரூபாய்களாகும். இந்த இரண்டும் போனஸ் தொகை போன்றது. இரண்டுக்கும் மேற்பட்ட போட்டிகளில் தோல்வியுற்று கோப்பையை வென்றால் அந்த அணிக்கு முதலில் அறிவிக்கப்பட்டபடி ரூ.23 கோடியே 11 லட்சத்து 31250தான் கிடைக்கும்.

உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு, ரூ.10 கோடியே 78 லட்சத்து 61250 பரிசு தொகையாக கிடைக்கும்.

அரை இறுதியில் தோல்வியடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கு தலா ரூ.3 கோடியே 69 லட்சத்து 81000 பரிசு தொகையாக கிடைக்கும். காலிறுதியில் தோற்று வெளியேறும் நான்கு அணிகளுக்கு தலா ரூ.1 கோடியே 84 லட்சத்து 90500 பரிசு தொகையாகும்.

குரூப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 575 பரிசு தொகையாக கிடைக்கும். குரூப் சுற்றிலேயே வெளியேறும் அணிகளுக்கு ரூ.21 லட்சத்து 57 ஆயிரத்து 225 பரிசு தொகையாக கிடைக்கும். உலக கோப்பைக்கான மொத்த பரிசு தொகை 1 கோடி அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் இது 61 கோடியே 63 லட்சத்து 50000 ஆகும். கடந்த உலக கோப்பையின்போது மொத்த பரிசு தொகை ரூ.80 லட்சம் அமெரிக்க டாலர்களாகும்.

செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள, பரிசு தொகை அனைத்தும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின்படியானது என்பதால் போட்டி முடியும்போது இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பரிசு மதிப்பும் ஏறலாம் அல்லது இறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்