முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை நீர்மட்ட விவகாரம்: கேரள முதல்வருக்கு கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை,நவ 17 - முல்லை பெரியாறு நீர் திறக்கப்படுவதை முறைப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது என்று அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், "உபரி நீரை வைகை அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க முடியும். முந்தைய ஆண்டுகளில் இதுபோல் செய்யப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை. என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் அணையின் கீழ்ப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நீர்மட்டத்தை குறைக்கக் கோரி கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனுப்பிய கடிதத்திற்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதியிருப்பதாவது,

"முல்லை பெரியாறு அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. தமிழக அரசால் பரமாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கடந்த மே-2014-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், முல்லை பெரியாறு அணையின் தண்ணீரை நம்பியிருக்கின்றனர். பருவமழை மற்றும் தேவையைப் பொருத்தே அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது. அதனை முறைப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணி கடந்த ஜூன் மாதம் முதல் படிப்படியாகவே நடைபெறுகிறது. அணையின் நீர்மட்டம் திடீரென உயர்த்தப்படவில்லை. மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பலத்த மழை பெய்யவில்லை.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழு கூட்டத்திலும், அணையின் மதகுகளை உடனடியாக திறக்கும் அவசியம் ஏற்படவில்லை என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதனிடையே முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 142 அடியாக உயர்ந்தது. இதனை விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்களும் இதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்