முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, நவ.18 - 41 நாட்கள் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து இருமுடி ஏந்தி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மேல்சாந்தி கோவிலுக்குள் சென்று குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் இரவு 7 மணிக்கு புதிய மேல்சாந்திகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, மாளிகைப்புரம் அம்மன் கோவில் புதிய மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு புனிதநீர் தெளித்து, அய்யப்பனின் மூல மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். இந்த புதிய மேல்சாந்திகளின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும்.

சபரிமலை கோவிலில் நடை திறப்பு, தீபாராதனை, மேல்சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 18-ம் படியேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கும் நிகழ்ச்சி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான நேற்று நடந்தது. நேற்று முதல் 41 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சபரிமலை ஐயப்பன்கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, பூஜைகளை நடத்தினார். இதுபோல் மாளிகைப்புரம் அம்மன் கோவிலில் கேசவன் நம்பூதிரி பூஜையை தொடங்கினார்.

நடை திறப்பை முன்னிட்டு, பம்பை மற்றும் சபரிமலையில் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகளை தேவசம் போர்டும், கேரள அரசும் செய்திருந்தன.

மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ வீரர்களும் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கேரள டி.ஜி.பி. பத்மகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். மண்டல பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டு உள்ளன. சன்னிதானத்தில் 635 போலீசாரும், பம்பையில் 400 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், ஆயுதம் தாங்கிய கமாண்டோ படைவீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மைப்படை வீரர்களும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்கள் உள்பட மொத்தம் 1,300 பேர் தற்போது பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்