முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்பாலை கைது செய்ய ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பர்வாலா, நவ.19 - நீதிமன்ற உத்தரவுப்படி ஹரியானாவில் சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய அதிரடியாக ஆசிரமத்தின் நுழைவாயிலை தகர்த்து உள்ளே நுழைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஹரியானா போலீஸ் ஈடுபட்டு வருகிறது. ராம்பாலை பிடிக்கும் வரை தேடுதல் நடவடிக்கை தொடரும் என்று அம்மாநில டிஜிபி அறிவித்துள்ளார்.

சாமியார் ராம்பால் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தத சுமார் 3 ஆயிரம் அப்பாவி பெண்கள், பச்சிளங்குழந்தைகளையும் போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். முன்னதாக போலீசார் மீது ராம்பாலின் சீடர்கள் என்ற போர்வையில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசியதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் மீது 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு முதல் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்துக்குள்ளே ராம்பாலின் சீடர்கள் அணிவகுப்பு நடத்தி நீதிபதிகளை மிரட்டினர்.

இது தொடர்பாக பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ராம்பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ராம்பால் ஆஜராக உத்தரவிட்டு 2 முறை நீதிமன்ற பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் ராம்பாலை கைது செய்ய முடியாத அளவுக்கு அவரது சீடர்கள் போலீசாருடன் மோதினர். இதனால் கோபமடைந்த உயர்நீதிமன்றம் நேற்று மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் ராம்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியாகவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவப் படையினர், ரிசர்வ் போலீஸ் படையினர் பர்வாலா ஆசிரமம் முன்பு குவிக்கப்பட்டனர்.

ஆனால் போலீசாரை உள்ளே செல்ல விடாமல் பல ஆயிரக்கணக்கான ராம்பால் சீடர்கள் கோட்டை போல் இருக்கும் ஆசிரமத்தின் சுவர்கள் மீது ஏறி நின்று கொண்டு கொலைவெறித் தாக்குதல் தாக்குதல் நடத்தினர். இன்று இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியது.

மதில் மீது ஏறி நின்ற ராம்பால் சீடர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் .அத்துடன் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக போலீசாரும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் பார்த்தனர். போலீசார் நடத்திய தடியடியில் பல பத்திரிகையாளர்கள் ரத்த காயங்களுக்கு உள்ளாகினர். அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறிப் போனது.

ஆசிரமத்துக்குள் பல ஆயிரம் பேரை ராம்பால் திரட்டி வைத்திருப்பதால் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தால் பெரும் அசம்பாவிதம் நடைபெறக் கூடும் என்ற நிலை இருந்தது. போலீசார் தொடர்ந்தும் முயற்சித்துப் பார்த்தனர்.

நிலைமை மோசமாகி இருப்பதால் காவல்துறை அதிகாரிகளுடன் மாநில முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.

30 நிமிட நேரம் கெடு

பின்னர் திடீரென ராம்பாலின் ஆதரவாளர்களுக்கு 30 நிமிட நேரம் மட்டும் போலீசார் கெடு விதித்தனர். அவர்கள் அதற்குள் கலைந்து செல்லாவிட்டால் போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொள்வர் என்றும் எச்சரித்தனர்.

அதிரடியாக நுழைந்த போலீஸ்- பிடிபடும் வரை வேட்டை

30 நிமிட கெடு முடிந்த நிலையில் ஆசிரமத்தின் பிரதான நுழைவாயிலை தகர்த்துவிட்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். போலீசார் உள்ளே நுழைந்த போது மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பெண்கள், பச்சிளங்குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றி ஆசிரமத்தை சீல் வைத்தனர்.

பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் ஆசிரமத்துக்குள் ராம்பால் எங்கே பதுங்கியிருக்கிறார் என தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில டிஜிபி, ஆசிரமத்துக்குள் பதுங்கி இருக்கும் ராம்பால் பிடிபடும் வரை போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தொடரும் என்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்