முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொட்டில் குழந்தை: 4,500 குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19- 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், அதனை விரும்பாத சில பெற்றோர், அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து சாகடிப்பதாகவும் ‘ஸ்கேன்’ கருவியின் உதவியுடன், வயிற்றில் வளரும் குழந்தையை பார்த்து, பெண் குழந்தை என்றால் அதனை கருவிலேயே அழித்து விடுவதாகவும் கூறப்பட்டது.

இதனால், குழந்தைகளின் பாலின விகிதம் வெகுவாக வேறுபட்டு வந்தது. இந்த நிலையில் 1992-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ந் தேதி கருவில் இருக்கும் பெண் குழந்தையை அழித்துவிடச் சொல்லி மாமனார், மாமியார் வற்புறுத்தியதால், சேலம் மாவட்டம் தொப்பூர் காமராஜர்புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது இளம் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என செய்தி ‘தினத்தந்தி’யில், வெளியானது.

செய்தி வந்த அன்று காலையிலேயே, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரி மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து, “பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் அதை கொன்றுவிட வேண்டாம். அந்த குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள், அரசு அந்த குழந்தைகளை வளர்க்கும்” என்று அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, முதல் கட்டமாக, இந்த சம்பவம் நடைபெற்ற சேலம் மாவட்டத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பும், ஒரு தொட்டிலை வைக்க சொல்லி ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு, தர்மபுரி, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், 2011-ம் ஆண்டு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை திட்டத்திற்கான மையங்கள் தொடங்கப்பட்டன. தொட்டில் குழந்தை திட்டம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 572 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர், அதில் 3 ஆயிரத்து 766 பெண் குழந்தைகள், 806 ஆண் குழந்தைகள் ஆவார்கள். இதில், 2 ஆயிரத்து 946 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் 2 ஆயிரத்து 447 பெண் குழந்தைகள், 499 ஆண் குழந்தைகள் அடங்குவார்கள். தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பெற்றோர் நேரடியாக வந்து குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்திற்கு அளிக்க வந்தபோது, அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை தத்து எடுக்கும் ‘ஏஜென்சிகள்’ தற்போது 15 உள்ளன. குழந்தைகளின் உடல் நிலை தத்து கொடுக்கும் அளவிற்கு வந்த பிறகு, குழந்தைகள் நல குழுமத்திற்கு தெரிவிக்கப்பட்டு, இந்த ‘ஏஜென்சிகளிடம்’ சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் வேண்டாம் என்று விரும்புபவர்கள் தான் பெருமளவில் குழந்தைகளை இந்த திட்டத்தில் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளும் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்.

2 பெண் குழந்தைகள் எனில் தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், தாலிக்கு தங்கம் போன்ற திருமண திட்டங்களும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தை பாலின விகிதத்தை சமன் செய்தல் மற்றும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் தான் இந்த திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின்படி, ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கை, 2011-ம் ஆண்டு, 4 புள்ளிகள் உயர்ந்து, 946 ஆக உயர்ந்துள்ளது.

‘ஸ்கேன்’ மையங்கள் மிகுந்த கண்டிப்புடன் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிவிக்காமல் இருப்பதன் மூலமும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்கள், தாய்க்கு உடல் ரீதியான பிரச்சினை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்வது என உறுதியாக இருப்பதன் மூலமும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன், குழந்தைகள் பாலின விகிதத்தை சமன் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago