முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை

சென்னை - போதைப் பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மீனவர்கள் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் பொய்யான வழக்கை உருவாக்கினர். இந்த வழக்கில், இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30ம் தேதி ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் இலங்கைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டங்களில் குதித்தனர்.
எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது நடந்த ஆலோசனையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது. மீனவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்க வசதியாக வழக்கை இந்தியா வாபஸ் பெற்றுக் கொண்டதாக அப்போதே கூறப்பட்டது.
இதனிடையே மனுவை வாபஸ் பெற்ற தகவலை இந்தியா நேற்று முறைப்படி இலங்கையிடம் தெரிவித்தது. கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய இலங்கை அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன சமரநாயகே இந்த தகவலை உறுதி செய்தார். ஐந்து தமிழக மீனவர்களின் நிலைமை குறித்து இரண்டு நாட்களில் அதிபர் ராஜபக்சே முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், பிரபா கணேஷ் ஆகியோர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள் தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையின்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக ராஜபக்சே கூறியதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பேட்டியளித்த ஒரு சில மணி நேரங்களிலேயே, இலங்கை அதிபர் ஐந்து மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் இலங்கை குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைவிலேயே இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்.
3 வருடங்களாக அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாரும், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இலங்கையின் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த விவகாரத்திற்காக தொலைபேசியில் ராஜபக்ஷேவை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரையும் விரைவில் தமிழகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து