முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்...

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

மதுரை - 1979ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தொட்டும் கூட அணை 142 அடியை எட்டாமல் இருந்து வந்தது. இதையடுத்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை பொதுப்பணித்துறையினர் முற்றிலும் நிறுத்தினர் இதையடுத்து வேகமாக உயர்ந்து வந்த நீர்மட்டம் நேற்று மாலையில் 142 அடியை எட்டியது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 7ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியது.
திங்கட்கிழமையன்று, நீர்வரத்து அதிகம் இருந்ததால், நேற்று முன்தினமே அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும் என, பலரும் கருதினர். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதிக்கு சென்றனர். ஆனால், நீர்மட்டம், 142 அடியை எட்டாததால், அங்குள்ள மணி மண்டபத்தில், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முன்னதாக நேற்று நள்ளிரவு வாக்கில் 142 அடியை நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலையிலேயே அது நடந்து விட்டது. தற்போது குறைந்த நீர் வரத்தால் 12 மணி நேரத்திற்கு ஒரு புள்ளியே உயரும் நிலை உள்ளது. எனவே நீர் மட்டத்தை வேகமாக 142 அடியாக உயர்த்த குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
152 அடி நீர்மட்ட உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில், கடந்த 1972, ஜனவரி 2ஆம் தேதி 142.45 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. 1975, அக்டோபர் 12ஆம் தேதி அணை நீர்மட்டம் 143.30 அடியாக இருந்தது. 1977, நவம்பர் 4ஆம் தேதி அணையில் 146.70 அடி வரையும், 1979, அக்டோபர் 13ஆம் தேதி 143.70 அடி வரையும் தண்ணீர் தேக்கப்பட்டது.
மத்திய நீர்வள ஆணைய உத்தரவின் பேரில், பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தமிழக, கேரள அரசுகளிடையே கடந்த 1979, நவம்பர் 25-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதையடுத்து கடந்த 1980-இல் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி தொடங்கிய நிலையில், அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பெரியாறு அணையில் 136.30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து, 5-ஆவது முறையாக கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 142 அடியை எட்டுகிறது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று மனு செய்தது. இந்நிலையில், பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து விவாதிக்க, இம்மாதம் 26ம் தேதி கேரள மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட, மாநில அமைச்சரவை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து