முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் விடுதலை: ராமதாஸ் வரவேற்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழக மீனவர்களை மீட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பா.ம.க. சார்பில் வரவேற்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்ததாக பொய்யான குற்றச்சாற்றின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இலங்கை அரசு ரத்து செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 தமிழக மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
3 ஆண்டுகளாக பொய்க் குற்றச்சாற்றுகளைச் சுமந்தும், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியும் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் இறுதியாக விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுமே அதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தேன். இலங்கை நீதிமன்றங்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால் அதிரடி நடவடிக்கைகளின் மூலமாகத் தான் தமிழக மீனவர்களை மீட்க முடியும்; எனவே அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி மேற்கொள்ள வேண்டும் என்று 30.10.2014, 02.11.2014 ஆகிய நாட்களில் அறிக்கைகள் மூலம் வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படியே இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். நரேந்திர மோடி மேற்கொண்ட கடுமையான தூதரக நடவடிக்கைகளைத் தொடர்ந்து தான் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழக மீனவர்களை மீட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.
தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டுள்ள இந்த ஐவர் தவிர தமிழகத்தைச் சேர்ந்த சந்திரன், பாலமுருகன், மாரி, ஜீவா, தணிகாச்சலம், ராமேஸ்வரம், மனோகர், சரவணன், செந்தில் ஆகிய மேலும் 9 மீனவர்கள் இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்பதற்காகவும், இலங்கையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரவும் இதேபோன்ற கடுமையான தூதரக நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து