முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமியார் ராம்பாலை சிறையில் அடைக்க உத்தரவு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சாமியார் ராம்பாலை சிறையில் அடைக்க உத்தரவு.

சண்டிகர் - பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தால் சாமியார் ராம்பாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு அடுத்த விசாரணையை நவ 28-க்கு ஒத்திவைத்தது.
அரியனாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம்பால் (63) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நேற்று காலை நீதிபதி ஜெயபால், தர்ஷன் சிங் அடங்கிய பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் அமர்வு தள்ளுபடி செய்தது.
மேலும், நீதிமன்றத்தை பலமுறை அவர் அவமதித்ததால் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து ராம்பால் மதியம் 2 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அரியானா -பஞ்சாப் மாநிலங்களில் சாமியார் ராம்பாலுக்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சாமியார் ராம்பாலை தவிர்த்து ஆசிரம செய்தி தொடர்பாளர் ராஜ்கபூர், முக்கிய நிர்வாகி புருஷோத்தம் தாஸ், அவரது ஆதரவாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சாமியாரின் ஆதரவாளர்கள் 275 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக புருஷோத்தம் தாஸ், சாமியார் ராம்பாலின் மகன் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
முன்னதாக ராம்பால் மீதான வழக்கில் 43 முறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ராம்பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ராம்பாலின் ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீஸாரை தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அவருக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்ய ஹிசார் அருகே பர்வாலாவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசிரமத்தில் ராம்பால் பதுங்கி இருந்ததை அடுத்து அவரை கைது செய்ய போலீஸார் அங்கு விரைந்த போது அவர்கள் மீது அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் ஆயிரக்கணக்கானோரை கொண்டு ஆசிரமத்துக்குள் போலீஸார் நுழைய விடாமல் தடுப்பு ஏற்பட்டது.
அதனை மீறி ராம்பாலை கைது செய்ய போலீஸார் உள்ளே நுழைய முயற்சித்தபோது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதில், போலீஸார், பத்திரிகையாளர்கள், பொது மக்கள், ராம்பாலின் ஆதரவாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 6 பேர் பலியாகினர். இதனை அடுத்து போலீஸார் ராம்பாலை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து