முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதி பிரச்சினை: ஸ்டாலினுக்கு மேயர் கேள்வி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் யாரை சந்தித்தார்? என்ன நடவடிக்கை எடுத்தார்? ‘விளம்பர விசிட்’ அடித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என்று மேயர் சைதை துரைசாமி கூறினார்.
ஜெயலலிதா வழிகாட்டுதலில் கொளத்தூர் தொகுதியில் ரூ.81 கோடி செலவில் 1205 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் Neற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–, மக்கள் முதல்வர் அம்மாவின் வழிகாட்டுதலின்படி, ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளித் தந்ததால், அளப்பரிய சாதனைகளை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
இந்த மாமன்றத்தில் நான் எடுத்து வைக்கிற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுளை தாங்க முடியாமல் அதற்கு, தக்க பதில் சொல்ல இயலாமல் பொய்யையே மூலதனமாக்கி ஒரு புனைசுருட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மாநகராட்சியில் மாசு ஏற்படுத்திய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
அந்த அறிக்கையில் நான் சி.ஐ.டி. நகரில் வசிக்கவில்லை என்றும் ராஜ கீழ்ப்பாக்கத்தில் வசிப்பதாகவும் அதனால் மக்கள் என்னை சந்திக்க முடியவில்லை என்று ஒரு மாபெரும் பொய்யை கூறியிருக்கிறார்.
எவ்வளவு பெரிய பொய் இது?
நான் சி.ஐ.டி.நகரில் தான் வசிக்கிறேன் என்பதை சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் அறிவர். சென்னை நகரில் உள்ள யாரிடம் கேட்டாலும் நான் சி.ஐ.டி. நகரில்தான் வசிக்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்வார்கள். என்னை சி.ஐ.டி. நகரில் அதிகாலை 5½ மணிக்கே வருகை தந்து என்னை சந்தித்து தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து மனுக்கள் கொடுக்கும் பொதுநலச் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை கேட்டால் சொல்வார்கள்.
அந்த மக்களுக்காகவே அதிகாலையில் 5½ மணிக்கெல்லாம் கடையை திறந்து வைத்திருக்கின்ற என் வீட்டிற்கு எதிரே இருக்கும் தேனீர் கடைக்காரரை கேட்டால் சொல்வார். இவ்வளவு எதற்கு? என் வீட்டு வாசலில் ஒரு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமிராவில் எத்தனை மணிக்கு யார் யார் வருகிறார்கள் என்ற விவரங்களும், ஒவ்வொரு நாளும் நான் எத்தனை மணியிலிருந்து, எத்தனை மணி வரை பொதுமக்களை சந்திக்கிறேன். எப்பொழுது தூங்கச் செல்கிறேன் என்பதை அடையாளம் காட்டும் ஆதார உண்மை பதிவு உள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது சி.ஐ.டி. நகரில் வசிக்கவேயில்லை என்று இலைச்சோற்றில் ஒரு முழு பூசணிக்காயை மறைப்பது போல, ஒரு மகா பொய்யை கூறி உள்ள இவரை பொய்யர் மா.சுப்பிரமணியன் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.
இவர் சொல்லுகிற அனைத்து கருத்துக்களும் கொஞ்சமும் மெய்க்கலப்பில்லாத பொய்யாகத்தான் இருக்கும் என்பதற்கு இதுவே சான்றாகும்.
ஜெயலலிதா வழிகாட்டுதலில் கொளத்தூர் தொகுதியில் ரூ.81 கோடியில் 1205 பணிகள்
ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போது, அவர்கள் ஆற்றியபணி, வெறும் விளம்பர வெளிப்பாடு தானே தவிர, மக்கள் நலன் அவர்களது நோக்கம் அல்ல என்பதை தக்க ஆதாரங்களுடன் பலமுறை இந்த மாமன்றத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறேன். அதே வகையில் கடந்த 18.11.2014 அன்று போட்டோ கிராபர்களும், வீடியோ கிராபர்களும் புடைசூழ கொளத்தூர் சென்று, ஏதோ தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்வது போல, ஸ்டாலின் காட்டிக் கொண்டிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொளத்தூர் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களது கோரிக்கைகளை கவனத்தில் வைத்து, கொளத்தூர் பகுதியில் இன்னென்ன பணிகள் மேற் கொள்ளப்பட வேண்டும், என்னென்ன காரியங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரி மூன்றாண்டுகளில் அவர் எத்தனை கடிதங்கள் மாநகராட்சிக்குக் கொடுத்திருக்கிறார் என்று கணக்கெடுத்துப் பார்த்தால்,
வெறும் முப்பதே முப்பது கடிதங்களைத் தான் அவர் கொடுத்திருக்கிறார் என்பதை கொளத்தூர் தொகுதி மக்கள் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களும் தெரிந்து கொண்டால், இவர் சட்டமன்ற உறுப்பினராக எப்படி செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்ல, மக்கள் பிரச்சினை குறித்து, உதவி வேண்டியும், உதவி செய்திடக் கோரியும் பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பரிந்துரை செய்து, உரிய துறைகளுக்கு அனுப்புவது கூட கிடையாது.
ஆணையரை சந்தித்தாரா?
சென்னை மாநகரிலிருந்து திருவாரூர் சென்று, திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவாரூரில் உள்ள கோயில் குளத்திற்கு கரை கட்ட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவை, மாவட்ட கலெக்டரை சந்தித்து கொடுத்த ஸ்டாலின், சென்னை மாநகரிலேயே இருந்து கொண்டு, சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து, தன் தொகுதிப் பிரச்சினை குறித்து எந்த மனுவையும் இதுவரையும் கொடுக்கவில்லையே ஏன்?
இது தான் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு, சட்டமன்றத் உறுப்பினராக மு.க.ஸ்டாலின் ஆற்றுகிற தொண்டின் இலட்சணம்! இந்த உண்மையை மறைத்து கொளத்தூர் தொகுதி மக்களின் நலனுக்காகவே அயராது பாடுபடுவது போல, இப்போது பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்.
கொளத்தூர் தொகுதியின் மேம்பாட்டுக்காக, கொளத்தூர் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின்படி, தேவையான அனைத்துப் பணிகளையும் கொளத்தூர் தொகுதிக்கு மிகுந்த முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
2011ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இந்த மூன்றாண்டுகளில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவால் செய்து முடித்த, செயல்படுத்துகிற பணிகளின் எண்ணிக்கை 1205 ஆகும். அதற்கான நிதி 81.13 கோடி ரூபாய் ஆகும். அதே நேரத்தில், இதே கால அளவில் மா.சுப்பிரமணியத்தின் மேயர் காலத்தின் முதல் மூன்றாண்டுகளில் முடிக்கப்பட்ட பணிகள் 883 மட்டுமே. அதற்கான செலவு 56.61 கோடி ரூபாய் அளவு மட்டுமே!
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த சாலைகளின் எண்ணிக்கை 1468. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 740 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்டாலின் விளம்பர ‘விசிட்’
கொளத்தூர் தொகுதி முழுவதுமாக சுமார் 130 பொது நல சங்கங்கள் உள்ளன. இந்த பொது நல சங்கத்தினர், நேரில் என்னை சந்தித்தும், கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தும், தொலைபேசி மூலம் பேசியும், தங்கள் பகுதியின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் வேண்டிய தேவைகளைத் தெரிவித்து, அவற்றை எல்லாம் செயல்படுத்தி வருகிறோம். அதேபோல, எங்களது நாடாளுமன்ற உறுப்பினர், மாமன்ற உறுப்பினர்கள் வழங்கும் கோரிக்கைகளை ஏற்று, அதனை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு இடையில், தானும் இருப்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, கொளத்தூருக்கு விளம்பர ‘விசிட்’ அடித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினைப் பார்த்துக் கேட்கிறேன்.
* நீங்கள் போய் வந்த இடங்களில் எந்தெந்தப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்தீர்கள்? அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
* 3 ஆண்டு காலத்தில் பொதுமக்கள் உங்களிடம் கொடுத்த மனுக்கள் எத்தனை? அதில் கேட்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன? அதனை எந்தெந்த அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தீர்கள் என்பது பற்றிய குறிப்புகளை வெளியிட முடியுமா?
* கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்திருக்கிறீர்கள். அந்த அலுவலகத்திற்கு மாதத்தில் நீங்கள் வருவது எத்தனை நாள்? அங்கு வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதன் மீது நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? அந்த கோரிக்கை மனுக்களில் நீங்கள் பரிந்துரை செய்தது எத்தனை என்பது பற்றிய விவரங்களைப் பட்டியலிட முடியுமா?
அரசியல் வணிகர்
* பொது நலச் சேவை என்றால் என்னவென்று அறியாத, சுயநல அரசியல் வணிகர்தான் மு.க.ஸ்டாலின்! பொது நலச் சேவைக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள உறவு என்பது, அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள உறவுதான். ஆட்சியில் இருக்கும்போது அதிகாரத்தை பயன்படுத்தத் தெரியாமல் இருந்துவிட்டு, தற்போது பொதுநல சேவகர் போல, நாடகமாடி மக்களை போலி விளம்பரத்தால் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்டாலினைப் பற்றி பொதுமக்கள் in and Out எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது என்பதை ஸ்டாலின் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
ஸ்டாலின், அரசியலுக்கும் பொது வாழ்க்கைக்கும் தகுதியற்றவர். திறமையற்றவர். நாகரீகமான செயல்பாட்டுத் தன்மையற்ற ஒரு அரசியல் அரைவேக்காடு என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சூடு சொரணை இருந்தால், சட்டமன்றத்தைக் கூட்டத் தயாரா?” என்று கூக்குரல் இடுகிறார் ஸ்டாலின்.
சட்டமன்றத்தைக் கூட்டு கூட்டு என்று கூப்பாடு போடுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்றத்தை மக்கள் நலனுக்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை சிந்தனை உண்டா? எதற்காக சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்கிறார் ஸ்டாலின்? அங்கே போய் அரிஸ்டாட்டிலைப் போல அறிவாற்றல் மிக்க வாதங்களை எடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை, அண்ணாவைப் போல ஆணித்தரமான கருத்துக்களை பதிய வைக்கப் போகிறாரா? எதற்காக இந்த நாடகம். இவரது சட்டமன்ற நடவடிக்கைகளை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
65¼ நிமிடம் பேசிய ஸ்டாலின்
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடிய சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற மொத்த நாட்கள் 156 அந்த மொத்த நாட்களில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நாட்கள் 53.
தி.மு.க. வெளிநடப்பு செய்தது 45 முறை.
தி.மு.க. வெளியேற்றப்பட்டது 34 முறை.
சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது 26 முறை தான்.
ஆனால் அந்த 26 முறையில் அவர் பேசிய நேரம் 65¼ நிமிடங்கள் மட்டுமே!
இதுதான் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு! சட்டமன்றத்தின் மாண்பினை அறியாதவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செலவிடப்படும் நேரத்தின் மதிப்பினை அறியாதவர் மு.க.ஸ்டாலின் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்குடன் சட்டமன்ற வளாகத்தில் நுழைபவர் மு.க.ஸ்டாலின்!
வெளிநடப்பு செய்வதற்கென்றே சட்டமன்றத்திற்கு வருபவர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டாலினால் சட்டமன்றத்திற்கும் ஒரு நன்மையும் இல்லை. அவரை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கும் ஒரு நன்மையும் இல்லை. கொளத்தூர் பகுதி மக்களுக்கும் நன்மை இல்லை.
ஆகவே, சட்டமன்றத்தைகூட்டக் கோரும் தகுதியோ, அருகதையோ ஸ்டாலினுக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து