முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

நெல்லை - திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சபரிமலை செல்லும்,சென்றுதிரும்பும் ,ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய தொடர்ந்து கொட்டிவரும் கனமழையால் நாங்குநேரி அருகே பாம்பன் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால், கிருஷ்ணபுதூர் கிராமத்திற்குள் நீர்புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் மேடான இடங்களில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.நெல்லை,தூத்துக்குடி மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் தேவையின் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை ஒரே நாளில் 3.25 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.50 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 143 அடியாகும். அணைப்பகுதியில் 132 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 635 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
மாவட்டம் முழுவதும் பலத்தமழை பெய்வதாலும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்வதாலும் அணை நீர் வெளியேற்றப்படாமல், மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் வழக்கம்போல ஸ்ரீவைகுண்டம் அணையை கடந்து தாமிரபரணியில் தண்ணீர் வீணாக கடலில் செல்கிறது.
நேற்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 188 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டணத்தில் 175 மி.மீ., நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 165 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 93 மி.மீ., சேரன்மகாதேவி 92 மி.மீ.,மூலைக்கரைப்பட்டியில் 96 மி.மீ., ராதாபுரம் 139 மி.மீ., ஆலங்குளம் 113 மி.மீ.,மழை பதிவானது.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன் அணை பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
குழித்துறையாறு, பரளியாறு, பழையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து