முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையை கூட்ட சொல்வதற்கு கருணாநிதிக்கு அருகதையில்லை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை கூட்டப்படுவது பற்றி பேச அருகதை இல்லை. சட்டப்பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தமளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
சட்டப்பேரவை பற்றியோ, சட்டப்பேரவைக் கூட்டங்கள் பற்றியோ அல்லது சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசுவதற்கு ஒரு சிறிதளவேனும் அருகதை உள்ளவரே அதைப்பற்றி பேசலாம். சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை கூட்டப்படுவது பற்றி பேசுவது, "அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்" என்னும் சொலவடையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சட்டப் பேரவை கூட்டப்படுவது குறித்து நான் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். அது பற்றி புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் கருணாநிதிக்கு அதே விளக்கத்தை மீண்டும் அளிக்க வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கடந்த கூட்டத் தொடர் 12.8.2014 அன்று தான் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையும் இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தேர்தலுக்குப் பின்னரே எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் 12.8.2014 வரை நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசால் கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத் தொடர் 21.7.2009 அன்று முடிவுற்றது. அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் 6.1.2010 அன்று தான் கூட்டப்பட்டது.
இந்திய அரசமைப்பின் படி ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே உள்ள கால அளவு ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும். எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் நடைபெறும் விவாதங்களில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதற்கு, திமுக, தனி இலக்கணமே வகுத்துள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வது, அதற்கு மாண்புமிகு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது குழப்பம் விளைவிப்பது, வெளிநடப்பு செய்வது அல்லது சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வெளியேற்றச் செய்வது என்பது தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்றத்தில் திமுகவினர் பங்கேற்ற வரலாறு. இது போன்ற நாடகங்களை மீண்டும் அரங்கேற்றுவதற்குத் தான் ஸ்டாலின் துடிக்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும்" ன்று ஸ்டாலினுக்கு நான் அளித்த விளக்கம் திரு.கருணாநிதிக்கு புரியவில்லை என்றால் அதை மீண்டும் ஒரு முறை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து