முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் குறைகள் தீரும்!

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

இறைவன், மண், நீர், தீ , காற்று, வானம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற அட்ட மூர்த்தங்களாக விளங்குகிறான். கார்த்திகையின் அதிதேவதை அக்னி. இந்த அக்னி சிவபெருமானின் சக்திகளுள் ஒன்று. ஆகவேதான் கார்த்திகை நாளோடு தீபம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றுவதன் தத்துவம், அஞ்ஞானமாகிய இருளை அகற்றி மெய்ஞான ஒளியை பெற வேண்டும் என்பதே ஆகும். கார்த்திகையன்று தீபமேற்றி நெல், பொரி, அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்கிறோம். இவை ஒவ்வொன்றிற்கும் ஓர் அர்த்தம் உள்ளது.
சிவாலயங்களில் கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் தேரேறி திரிபுரம் எரிந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சிவபெருமானை ஜோதி வடிவில் தரிசித்தல் என்பதையே இது உணர்த்துகிறது. சொக்கன் என்பது சிவபெருமானை குறிக்கும். ஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை, பொறாமை போன்ற மனமாக்களை ஆன்மஞானம் என்றும் தீயில் பொசுக்கி உண்மையான ஞானத்தை பெற்று அண்டம் அனைத்தையும் பிரகாசிக்க செய்யும் பரஞ்சோதியை தரிசனம் செய்வதே உண்மையான கார்த்திகை தீபம். சிவபெருமான் ஜோதி வடிவில் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருப்பது போல், காஞ்சிபுரத்தில் விளக்கொளிப் பெருமாள் என்று அழைக்கப்படும் ஜோதி வடிவ பெருமாளுக்கு தீபமேற்றி வைஷ்ணவர்கள் பெருமாள் கார்த்திகை கொண்டாடுகிறார்கள்.
கார்த்திகை விரதமிருந்து உமாதேவி சிவபெருமானின் இபாகத்தை பெற்றதும், திருமால் துளசியை மணந்து தன் திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில் தான். கார்த்திகை மாத பவுர்ணமி நாள் ஒன்றில் கோயிலில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒன்று அணையும் தறுவாயில் அகலில் இருந்த எண்ணெயை எலி ஒன்று குடித்ததால் திரி தூண்டப்பட்டு தீபம் பிரகாசமாய் எரிந்தது. என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே எலி திரியை தூண்டி விட்ட புண்ணியத்தால் மறுபிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது. மகாபலி சக்ரவர்த்தி முக்தியடைந்த நாள் கார்த்திகை மாத பவுர்ணமி. அன்றைய தினம் மக்கள் சுளுந்து சுற்றி மாவலியோ மாவலி என்று மகிழ்ச்சியுடன் கூவி கோலாகலமாக கொண்டாடுவார்கள். சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாய் அவதரித்த முருகப் பெருமானை கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அதன் காரணமாகவே திருக்கார்த்திகை முருகனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஆகவே கார்த்திகை திருநாளில் முருகப் பெருமானை குறித்து விரதம் இருப்பதால் சிறப்பான பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
நாரதர் கார்த்திகை விரதமிருந்து சப்த ரிஷிகளை விடவும் உயர்வான ஆன்மீக பதவி, திரிலோக சஞ்சாரம் செய்யும் வரத்தையும் பெற்றார். திரிசங்கு இவ்விரதமிருந்து பேரரசனானான். திருமால் வராக வடிவிலும், பிரம்மா அன்ன வடிவிலும், சிவபெருமானின் அடிமுடியை தேடி சென்று காண முடியாமல் திரும்பிய நாள் கார்த்திகை திருநாள். திருவண்ணாமலை பஞ்ச பூத தலங்களுள் ஒன்று. தீபத்திருநாளன்று ஜோதியை தரிசிக்க அங்கு பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளுவதாக ஐதீகம். திருவாரூரில் பிறந்தவருக்கும், காசியில் இறந்தவருக்கும் சிதம்பரத்தை தரிசித்தவருக்கும் முக்தி கிடைக்கும் என்பர். ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைத்து விடும். குழந்தை பேரின்மை, தீராத வியாதி, குடும்பத்தில் பிரச்சினை உள்ளவர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தாலே போதும். அவர்கள் குறை தீர்ந்து விடும். சிவபெருமான் தன் புன்னகையால் திரிபுரம் எரித்த நாள் கார்த்திகை சோமவாரம் சேர்ந்த பவுர்ணமி.. அதனால்தான் பவுர்ணமியுடன் கூடிய சோமவார நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து