முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வர தெற்கு கரோலினா மாகாணத்துக்கு அழைப்பு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென அமெரிக்காவின் தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹலே தலைமையிலான குழுவுக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் சென்னையில் நிதி நகரம் அமைப்பது, சூரிய மின்சக்தி உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் தெற்கு கரோலினா கவர்னரிடம் முதல்வர் விவாதித்தார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹலே தலைமையிலான குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அமெரிக்காவுக்கும், தமிழகத்துக்கும் பொருளாதார ரீதியில் இருக்க கூடிய மிகவும் வலிமையான உறவு குறித்து இந்த சந்திப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விவரித்தார். தமிழகத்தில் அதிகளவு முதலீடு செய்யும் 5 முன்னணி நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் 400 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக முதலீடுகளை செய்திருப்பதாகவும், அதன் மூலம் 1.75 லட்சம் பேர் நேரடியாகவும், 2.5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த போர்டு, கேட்டர்பில்லர் உள்ளிட்ட முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடுகளை செய்துள்ளன என குறிப்பிட்ட முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு திட்டம் 2023 என்பது தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அடிக்கல்லாகும் என்றார்.
தமிழகத்தில் முதலீடுகளை செய்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மாநிலத்தில் மிக சிறந்த சொத்தாக மனிதவள ஆற்றல்கள் விளங்குகின்றன என்று தெரிவித்தார். ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரிபாகங்கள், மின்னணு பிரிவில் வன்பொருள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் தமிழகம் மிக சிறந்து விளங்குகிறது என குறிப்பிட்ட அவர், இங்கு சிறந்த முறையிலான சமூக கட்டமைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெற்கு கரோலினாவை சேர்ந்த வர்த்தக குழுவினர் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் கருத்துக்களை தொடர்ந்து பேசிய தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்க ஹலே, தனது மாகாணத்தில் தயாரிக்கப்படும் போயிங் விமானம், கார்கள், டயர்கள், கார்பன் பைபர் தொழிற்சாலைகள் குறித்து விவரித்தார். தெற்கு கரோலினாவில் பொறியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் அதிகளவு பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகவும், இங்கு பயிற்சி பெற்ற பொறியாளர்கள் இருப்பதாகவும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்களை அவர் ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் நிதி நகரம் அமைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் உள்ளிட்ட துறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழக தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன், நிதி துறை செயலாளர்(பொறுப்பு) உதயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து