முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் குண்டு வெடிப்பு: 6 பேரை பிடிக்க போலீஸார் வியூகம்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் ‘சிமி’ அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே 1-ம் தேதி 9-வது நடைமேடையில் வந்து நின்ற பெங்களூரு - குவாஹட்டி விரைவு ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பொறியாளர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செல்போன் சிக்னல்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் தொடர்ச்சியாக நடத்திய விசாரணை யில் ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த அம்ஜத், அஸ்லாம், ஜாகீர், மெகபூப், இஜாசுதீன், அபுபைசல் ஆகிய 6 பேர்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பை நிகழ்த்தியது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறியதாவது:
அம்ஜத், அஸ்லாம், ஜாகீர், மெகபூப், இஜாசுதீன் ஆகிய 5 பேரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் கள். அபுபைசல் மும்பையைச் சேர்ந்தவர். இவர்கள் 6 பேரும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக போலீஸாரால் தேடப்பட்டு வருபவர்கள். 2012-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச போலீஸார் இவர்களை கைது செய்து கத்வா சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறையின் சுவற்றில் டிரில்லர் இயந்திரம் மூலம் துளையிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அம்ஜத், அஸ்லாம், ஜாகீர், மெகபூப், இஜாசுதீன், அபுபைசல் ஆகியோர் உட்பட 9 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் வந்தவர்கள். இவர்களின் கூட்டா ளிகள் 3 பேரை மத்தியப் பிரதேச போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிட்டனர். மீதமுள்ள 6 பேரும்தான் தற்போது அசம்பாவித செயல்களை செய்து வருகின்றனர். ரயிலில் குண்டு வைப்பதற்கு முன்பு 4 முறை இவர்கள் சென்னை வந்து ஒத்திகை பார்த்துள்ளனர். இவர்களைப் பிடிக்க புதிய வியூகம் அமைத்துள்ளோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
6 பேரின் புகைப்படங்களை வெளியிட போலீஸார் மறுத்து விட்டனர். தீவிரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த 2001-ம் ஆண்டில் ‘சிமி’ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் புதிதாக உருவாகியுள்ள ஜமாத்உல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்து விட்டதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த விசாரணை யில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து