முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி: கருத்து கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அது தொடர்பான மக்கள் மனநிலை பற்றி ‘‘மக்கள் ஆய்வகம்’’ எனும் நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத்தொகுதிகள் வாரியாக சுமார் 3320 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தி தகவல் சேகரிக்கப்பட்டது. பிறகு அவை ஆய்வு செய்யப்பட்டன.
கருத்துக்கணிப்பு ஆய்வு முடிவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான முடிவுகளை ‘‘மக்கள் ஆய்வகம்’’ இயக்குனர் ராஜநாயகம் வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், அ.தி.மு.க.வுக்கு 44 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். தி.மு.க.வுக்கு 26 சதவீத ஓட்டுக்களும், பாரதீய ஜனதாவுக்கு 9 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும்.
அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ஜெயலலிதாவின் நிர்வாக திறமையே அடிப்படை காரணமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மிகச்சிறந்த நிர்வாகத்தை தந்ததாக 58 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே ஜெயலலிதா அமோக ஆதரவுடன் தன்னிகரற்ற தலைவராக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் 1530 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 20 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வரும் அபரிதமான மக்கள் செல்வாக்கால், ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதை மற்ற கட்சிகளால் தடுக்க முடியாது என்று தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டுச்சேர்ந்தாலும் ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது தவிர்க்க முடியாதது என்பது கருத்துக்கணிப்பில் உறுதியாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது பற்றியும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மக்களில் 53 சதவீதம் பேர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகக்கடுமையானது. ஏற்க இயலாதது என்று கூறியுள்ளனர்.
மேலும் 30 சதவீதம் பேர், ஜெயலலிதாவுக்கு இப்படியொரு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் சுமார் 83 சதவீதம் பேரின் அனுதாபம் ஜெயலலிதாவுக்கு கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக 14 சதவீதம் பேரே கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆட்சி நிர்வாகம் மிக, மிக சிறப்பாக இருந்ததாக மக்கள் கூறியுள்ளனர். இந்த கருத்தை தெரிவித்த சுமார் 60 சதவீதம் பேர், ஜெயலலிதா நிர்வாகத்தில் இல்லாததால் கடும் வேதனை அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா நிர்வாகப்பொறுப்பில் நேரடியாக இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. வுக்கு சரிவு எதுவும் ஏற்படாது என்றும் கருத்துக்கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும் என்று 31 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா நிர்வாகம் செய்யாவிட்டாலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பில் மாற்றம் வராது என்று 25 சதவீதம் பேர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக பாரதீய ஜனதா கட்சி அவதாரம் எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருந்தன.
ஆனால் சமீபத்திய கருத்து கணிப்பில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு 43 சதவீதம், தி.மு.க.வுக்கு 26 சதவீதம், பா.ஜ.க.வுக்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, நாடெங்கும் மோடி அலை வீசிய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மோடி அலை எடுபடவில்லை. இந்த நிலையில் மோடி பிரதமராகி விட்ட பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பது கருத்து கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல விஷயங்களில் பா.ஜ.க. அரசின் அணுகுமுறை காரணமாக தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் மோகம் தமிழ்நாட்டில் குறைந்து இருப்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ரஜினி புதிய கட்சி தொடங்கலாம் என்று 17 சதவீதம் பேரும், விஜய் புதிய கட்சி தொடங்க 21 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரஜினி, விஜய் இருவரையும் அரசியல்வாதிகளாக பார்ப்பதை விட நடிகர்களாக பார்ப்பதையே விரும்புவதாக 90 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனவே ரஜினி அரசியலில் ஈடுபடுவது பற்றி தமிழ்நாட்டு மக்கள் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து