முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க விவகாரத்தில் ரஜினியும் கமலும் ஏன் தலையிடவில்லை?: நடிகை ராதிகா கேள்வி

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் சங்க விவகாரத்தில் ரஜினியும் கமலும் ஏன் தலையிடவில்லை என்று நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் அக்டோபர் 18-ல் நடைபெறுகிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளன.
நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கோவை சரளா, பிரசன்னா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நளினி உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் சரத் குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, ராதிகா, பாக்யராஜ், ஊர்வசி, மோகன் ராம் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது நடிகை ராதிகா பேசியதாவது:
நடிகர் சங்க விவகாரம் வேதனையளிக்கிறது. யாரும் இந்தப் பிரிவினையை விரும்பவில்லை. நாளை இந்த நடிகர்கள் எங்களைப் பார்க்கமாட்டார்களா? என் கணவரைப் பற்றி ஒருவர் அசிங்கமாகப் பேசுகிறார். இதென்ன அரசியல் மேடையா? நடிகர்களின் ஒற்றுமை குலையக்கூடாது. நாங்கள் ரஜினி, கமலை கெளரவப்படுத்துகிறோம். ஆனால் இங்கு சண்டை நடக்கிறபோது அவர்கள் ஏன் தலையிடவில்லை? விஷால் , கார்த்தியை யாரோ பின்னணியில் இருந்து தூண்டி விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அசிங்கமா என்று மற்ற மாநிலங்களில் சிரிக்கிறார்கள் என்றார்.

சிம்பு பேசியதாவது:

நடிகர் சங்கத்தை உடைப்பதே விஷால் அணியின் நோக்கம். தேர்தலில் நிற்பதால் என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள். இன்று கேள்வி கேட்கிறவர்கள் அன்று கட்டடம் தொடர்பாக ஏன் கேள்வி கேட்கவில்லை? எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தில் என்ன தவறு? அங்கு திரையரங்கம் இல்லையென்றால் வேறு என்ன கட்டடம் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறேன். இன்று வந்தவர்கள் சினிமா குடும்பத்தில் பிரிவினையைக் கொண்டு வந்தால் அதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். 3500 ஓட்டுகள்தான் நடிகர் சங்கத்தில் உள்ளது. அவர்களிடம் போய் உங்கள் குற்றச்சாட்டுகளைக் கூறலாம். அதற்குப் பதிலாக ஏன் ஏழரை கோடி பேரிடம் சொல்கிறீர்கள். மூத்த நடிகர்கள் எதிரணியின் சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்