முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளிமையாக கற்க இதோ சில டிப்ஸ்: படிக்கும் முறை

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2016      மாணவர் பூமி
Image Unavailable

பார்ப்பதையும், பார்க்காததையும் நினைத்து அலைபாயும் மனதை கொண்ட மாணவ பருவத்தில் பாடம் ஒன்று மட்டுமே மனதில் பதியாத பாதிப்பு நிலைகள் பலருக்கும் வருவதுண்டு. இந்த வயதில்தான் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை கவனமுடன் படித்து தேர்வு எழுதினால் வாழ்வில் பயமில்லாமல் எதிர்கொண்டு வாழ்ந்து சாதிக்கலாம். பள்ளி பருவத்தில் படிக்கும்போது ஒரு பாடத்தினை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் படிக்கும் முறை மாறினால் கூட மனதில் பதியாத நிலை ஏற்படும். சரியான முறைப்படி படித்தால் எவ்வளவு கடினமாக பாடமாக இருந்தாலும் மனதில் பதிந்துவிடும். இதற்கு முதற்கட்டமாக ஒரு பாடத்தினை படிக்க போகும் முன்னர் அந்த பாடம் முழுவதையும் மனப்பாடம் செய்யாமல் மேலோட்டமாக ஒருமுறை வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணை தலைப்புகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பாடத்தில் உள்ள பொருள் புரியாமல் போனாலும் தலைப்புகளையும், துணை தலைப்புகளையும் கவனத்தில் கொண்டால் எளிதில் மனதில் ஓடிவந்துவிடும்.

மேலும், நாம் படிக்கும் பாடம் எதனை பற்றியது என்பது தெளிவாக விளங்கி விடும். பாடத்தில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிபார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வார்த்தைகள் மனதில் பதிந்து மற்றவற்றை எடுத்துக்கொடுக்கும்.  மேலும், பாடங்களை படிக்கும்போது அதில் நமக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். குறிப்பாக அறிவியலில் மின்னாற்பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற்பகுப்பு என்றால் என்ற கேள்வி எழும்ப வேண்டும். இதற்கு விடை கண்டுபிடித்து விட்டால் அதனை வைத்தே முழுகேள்விக்கும் விடை எழுதி விடலாம்.

வாசித்தல்: எந்தவொரு பாடத்தையும் படிக்கும் முன்னர் முழுமையாக வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக புத்தகத்தில் அதிளவில் அடிக்கோடு இடக்கூடாது. இதனால் பின்னாளில் படிக்கும்போது குழப்பமான சூழ்நிலை உருவாகும். தேவையான இடங்களில் தேவையான குறிப்புகளுக்கு மட்டும் புரிந்து கொள்வதற்காக அடிக்கோடு இட வேண்டும். படிக்கும்போது மனதினை ஒருநிலைப்படுத்தி திரும்ப திரும்ப சொல்லி பார்க்க வேண்டும். இந்த முறையானது பாடங்களை மனதில் பதிந்து கொள்ள மிகவும் எளிமையான வழியாகும். படித்தவற்றை அதற்கான வார்த்தைகளில் சொல்லி பார்க்காமல் தனது சொந்த வார்த்தையில் சத்தமாக சொல்லி பார்க்க வேண்டும். படித்து முடித்தபின்னர் மனதில் பதிந்து விட்டது என்று தோன்றினால் உடனடியாக அதனை நாமாகவே தேர்வு நடப்பதை போன்று எழுதி பார்க்க வேண்டும். இவ்வாறு எழுதியவற்றை நமக்கு நாமே திருத்தி மதிப்பெண் போட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் தன் திறமை, தன் நிலைமை போன்றவை உணரப்பட்டு தனது தரத்தினை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

ஒரு விசயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்துக்கொள்வதை விட சில குறிப்புகளால் மனதில் வைத்துக்கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணங்கள், ஓசைகள், எழுத்துக்கள் போன்றவற்றை அதில் ஞாபகம் வைத்து கொண்டால்  கவனம் சிதறாமல் எழுதி வெற்றி பெறலாம். என்னதான் படிப்பு முக்கியம் என்றாலும் எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்காமல் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியாக மனதை அலைபாய விடாமல் தூங்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால்தான் மனநிலையும் சரியாக இருக்கும். எனவே, நாள்தோறும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் புத்துணர்ச்சி அடைந்து ஞாபசக்தி அதிகரிக்கும். நடைப்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்கும் சிறிதளவு நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உணவுமுறை: உணவுப் பொருட்களில் அதிக கொழுப்புள்ள இறைச்சி உள்ளிட்டவைகளை உட்கொள்ளாமல் பச்சை காய்கறிகள், இயற்கை உணவுப்பொருட்கள் முதலியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை மட்டுமல்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும் நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பதும் கல்வி கற்பதற்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி படித்தாலே வெற்றி நிச்சயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்