முக்கிய செய்திகள்

கோபி பகுதியில் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றம் தரும் சிக்கனமான உயிரியல் மருந்துகள்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      வேளாண் பூமி
velon

Source: provided

தற்போது விவசாயிகளின் கவனம் அங்கக வேளாண்மை என்னும் இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவருகிறது. எனினும் சில குறிப்பிட்ட உயிரியல் மருந்துகள் (காரணிகள்) ,  இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து வருகின்றன.

இதுகுறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது. : ‘வேளாண்மையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை  அளவு கடந்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மண்வளம் குன்றி,  நீர்வளமும் பாதிப்பு அடைகின்றன. இரசாயன வகைஇடுபொருள்களை வயல்களில்  பயன்படுத்துவதை தவிர்த்து பயிர் சுழற்சி,  இயற்கை உரங்கள்,  இயற்கைப் பூச்சி,  நோய் மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற இயற்கை வேளாண்மை முறையை தற்போது பல விவசாயிகள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் பல்வேறு நோய்களைத் திறம்படக் கட்டுப்படுத்துவதில் ‘டிரைகோடெர்மா விரிடி” மற்றும் ‘சூடோமோனாஸ்”  - என்ற இரண்டு உயிரியல் மருந்துகளும் இயற்கை விவசாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

1.டிரைகோடெர்மா விரிடி (டி.விரிடி) : இது ஒரு நன்மை செய்யும் பூஞ்சாணம் ஆகும். பவுடர் வடிவத்திலும்,  திரவமாகவும் கடைகளில் கிடைக்கிறது. விதை,  வேர், இலைகளில் உள்ள தீமைசெய்யும் பூஞ்சாணங்கள் - அதாவது நோய் ஏற்படுத்தும் கிருமிகள் மீது இந்த உயிரியல் பூஞ்சாண மருந்து சிறப்பாக செயல்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக வேர் அழுகல், தண்டு அழுகல் நோய் (நிலக்கடலை, எள் பயறுவகைகள் காய்கறிகள் பயறுவகை, பழங்கள்) – போன்ற நோய்களிலிருந்து பயிர்களைக் காக்கிறது. மேலும் விதை முளைத்தலைத் தூண்டுவதுடன், பூக்கள் உருவாவதையும், பயிர் வளர்ச்சியையும் தூண்டி மகுந்த நன்மை செய்கிறது. மேலும் இது மனிதர்கள், விலங்குகள், தேனீக்கள், பறவை, மீன்களுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.

இதை உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம்,  ரைசோபியம்.... போன்றவை) தொழு உரம்,  இயற்கை உரங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் டிரைகோடெர்மா விரிடியைப் பயன்படுத்தும் போது வெகு எளிதில் பயிர்களின் மீது பட்டுப் பரவி நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் என்சைம்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் மேலும், 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி செயல்படக்கூடியதாகும்.

பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அரிசிக்கஞ்சி சிறிதளவு சேர்த்து விதைகளுடன் நன்கு கலந்து ஒரு நாள் வைத்திருந்து,  விதைக்கும் போது,  விதைகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், மட்கிய குப்பையுடன் ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடியை கலந்து அடியுரமாக இடும்போது நல்ல பலன் கிட்டுகிறது. திரவ வடிவில் ஏக்கருக்கு 100 மில்லி டி.விரிடி மருந்தை தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளிக்கும் போது, நோய்கள் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. டி.விரிடியைப் பயன்படுத்தும் போது இரசாயன பூஞ்சாண மருந்துகளை சேர்த்துக் கலந்து தெளிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டி.விரிடியை நோய் உண்டாக்கும் பூஞ்சாணங்களின் செல்சுவரைக் கரைத்து நச்சுப் பொருள்களை சுரந்தும் நோய்காரணிகளை அழிப்பதாலும், மண் வழிப்பரவும் நோய்க்கிருமிகள் நுழையாதவாறு பயிர்களின் வேர்களுக்கு புறப்பாதுகாப்பை அளிப்பதாலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

2. சூடோமோனாஸ் ‡புளோரோசன்ஸ் : இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி,  இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.

நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும்,  ‘ஹைட்ரஜன் சயனைடு”  மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;… கலந்து  பின் விதைக்கலாம். ஒரு கிலோ „சூடோமோனாஸ்;… உடன் தேவையான தண்ணீர்  கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம். இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில்  கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம். மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;”  - தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி,  மிகக் குறைந்த செலவில்  எண்ணற்ற பலன்களை அடையலாம்”

இவ்வாறு நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
கோபி சிவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: