முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனை பட்டியலை வெளியிட தயாரா ? பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

பதோஹி  - உத்தரப்பிரதேசத்தில் என் ஆட்சியில் நான் செய்த 10 சாதனைகளை வெளியிடுகிறேன். மத்தியில் ஆட்சி செய்யும் நீங்கள் செய்துள்ள சாதனைகளை வெளியிட முடியுமா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6-வது கட்ட தேர்தலும் மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலும் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் வரும் 8-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தெரு பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபக்கத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாடி கட்சி தலைவரும் முதல்வருமான அகிலேஷ் யாதவும் சேர்ந்து தெரு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மோடிக்கு சவால்:
பின்னர் பதோஹியில் நடந்த சமாஜ்வாடி தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-நான் கடந்த 5 ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறேன். என் ஆட்சியில் நான் செய்த 10 சாதனைகளை பட்டியிலிட்டு காட்டுகிறேன். அதேமாதிரி நீங்கள் மத்தியில் பிரதமராக இதுவரை 3 ஆண்டுகள் பதவி வகித்துள்ளீர். இந்த 3 ஆண்டுகளில் என் அளவுக்கு 10 சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்களா? அப்படி என்றால் அந்த 10 சாதனைகளை வெளியிட தயாரா என்று கேட்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக நான் கேள்விப்படுகிறேன். பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஓட்டுக்களை சைக்கிள் சின்னத்திற்கு போடுங்கள். கடந்த 5 ஆண்டுகால என் ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவேன். ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவேன்.  இவ்வாறு அகிலேஷ் கூறினார்.

மாயாவதி மீது தாக்கு:
பிரசார கூட்டத்தில் பகுஜன்சமாஜ் கட்சி தலைவரையும் அகிலேஷ் யாதவ் தாக்கி பேசினார். பிரசாரத்தின்போது முதலில் என் உயிர் போவற்கு முன்பு நினைவகங்களை கட்டியே தீருவேன் என்று மாயாவதி கூறினார். தற்போது அவரது பிரசார பேச்சு மாறி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி பேசி வருகிறார். மாயாவதி என்னுடைய அத்தைதான். இருந்தபோதிலும் அவரிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதாவுடன் உறவு வைத்துக்கொண்டாலும் வைத்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்படலாம்.  அதனால் பகுஜன்சமாஜ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று அகிலேஷ் எச்சரிக்கை விடுத்தார். அகிலேஷ் பேசிய பிரசார கூட்டத்திற்கு பின்னர் ஒரு சுவரில் ஏராளமானோர் ஏறி நின்றதால் அந்த சுவர் இடிந்துவிழுந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். 25 சைக்கிள்கள் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்