முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் 60 ஆண்டுகள் நிறைவு: கருணாநிதிக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - ஒரே சின்னத்தில் 13 முறை போட்டியிட்டு 60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, ''1949-ல் திமுக தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் 1957-ல் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியே இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்று சாதனை படைத்தவர் கருணாநிதி. தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் முழுநேரமும் விவாதங்களில் பங்கேற்று ஆரோக்கியமான கருத்து மோதல்களை நடத்துவதில் அவருக்கு நிகர் அவர் தான். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு என்று அண்ணா கூறியதற்கு சட்டப்பேரவையில் செயல் வடிவம் கொடுத்தவர் கருணாநிதி. அரசியலில் இவரது வெற்றிக்கு காரணம் இவர் எடுக்கிற துணிச்சலான முடிவுகள் தான்.

1980 இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் முன்னணிப் பங்கு வகித்தவர். அதேபோல, 1998 முதல் 2004 வரை மத்தியில் நடைபெற்ற மதவாத பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் சோனியா காந்தி தலைமையில் கூட்டணி அமைய வேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி. அதன் விளைவாக 2004 இல் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி சட்டப்பேரவையில் காலடி பதித்து 60 ஆண்டுகள் ஆகி 93 வயதில் இன்றைக்கு உடல் நலக்குறைவோடு இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. விரைவில் அவர் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்  என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்