2019 பார்லி. தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி வியூகம்

வியாழக்கிழமை, 11 மே 2017      அரசியல்
Modi 2017 4 30

புதுடெல்லி  - பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.  நாட்டில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் 13-ல் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 13 முதல்வர்கள் மற்றும் 5 துணை முதல்வர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அவ்வப்போது டெல்லிக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தொடங்கிய இந்தக் கூட்டங்களில் பிரதமர் மோடி நேரடி கவனம் செலுத்தவுள்ளார். இதற்காக முன்பை விட அதிக எண்ணிக்கையில் அதாவது மாதம் இருமுறை இக்கூட்டம் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாஜகவின் தேசிய நிர்வாக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உ.பி. தேர்தல் முடிவுகளால் பிரதமர் மோடியின் அலை நாடு முழுவதிலும் தொடர்ந்து வீசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஆட்சி நேரடியாக நடைபெறுவதாக மக்கள் நம்புகின்றனர். இம்மாநிலங்களில் எழும் குறைபாடுகள் நேரடியாக பிரதமரின் செல்வாக்கைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இம்மாநிலங்களில் பிரதமர் நேரடி கவனம் செலுத்தி, குறைகளைக் களைவதன் மூலம் அடுத்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்பது எளிதாகும்” என்று தெரிவித்தனர்.

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில்  தேர்தல்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இமாச்சலபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கர்நாடகா மற்றும் 4 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் இமாச்சலபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் வரவுள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்து வது வழக்கமாக உள்ளது. இம்மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு எதிரான அலை எழுவதும் வாடிக்கையே. இந்த அனைத்தையும் மீறி தனது ஆட்சியை மீண்டும் தக்க வைப்பது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே, பாஜக ஆளும் மாநிலங் களில் அரசின் செயல்பாட்டை நேரடியாகக் கண்காணித்து, இரு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இம்முடிவு கட்சியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: